democracy_2353309f

“இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 (ஏ) என்பது குடிமக்களின் விடுதலை உணர்வை ஒடுக்குவதற்கான அரசியல் (சட்ட) பிரிவுகளின் இளவரசன் போன்றது” என்று காந்தி வர்ணித்திருக்கிறார். மக்களுடைய சுதந்திர உணர்வைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளை கொடுங்கோலர்களாக உருவகப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், மத்திய அரசுக்கு எதிராக ஸ்ரேயா சிங்கால் தொடுத்த வழக்கில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 (ஏ) அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்று அறிவித்து, அந்தப் பிரிவு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, குறுகிய காலமே ஆட்சி செய்த ஆனால் கொடுங்கோலனான ஒரு சர்வாதிகாரியின் முடிவு என்ற வகையில் வரவேற்கப்பட வேண்டியது.

கடந்த சில ஆண்டுகளில் பலர் மீதும் அபாண்டமாக வழக்கு தொடுக்கப்படக் காரணமாக இருந்தது பிரிவு 66 (ஏ). சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே மறைவையடுத்து மும்பை நகர் மீது திணிக்கப்பட்ட முழு அடைப்பை விமர்சித்ததற்காகக் கல்லூரி மாணவி ஷாஹீன் மீதும், உத்தரப் பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் அமைச்சர் ஆசம் கானை விமர்சித்ததற்காக 12-ம் வகுப்பு மாணவர் குல்ஃபரஸ் கான் மீதும் பிரிவு 66 (ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த சட்டப் பிரிவுக்கு எதிராக 21 வயது சட்ட மாணவி ஸ்ரேயா சிங்காலும் வேறு சிலர் பிறகு சேர்ந்தும் வழக்கு தொடுத்ததால் விடிவுகாலம் ஏற்பட்டிருக்கிறது. இணையதளங்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய பிரிவு தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் சலமேஸ்வரும் ரோஹின்டன் நாரிமனும் நடத்தியபோதிலிருந்தே ஏராளமானோர் இதன் விவரங்களை வலைதளங்களில் பகிர்ந்துவந்தனர்.

நம்முடைய அடிப்படை சட்ட உரிமைகளிலேயே கைவைக்கும் புதிய சட்டங் களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் தன்னுடைய கடமையிலிருந்து உச்ச நீதிமன்றம் தவறியதே இல்லை. இந்த வழக்கின் முடிவும் அப்படித்தான்.

3 விதமான பேச்சு வடிவங்கள்

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 (ஏ) பிரிவு தெளிவாக இல்லை, உரிமையைப் பறிக்கும் அளவுக்கு நயவஞ்சகமாக இருக்கிறது, பேச்சுரிமையை மறைமுகமாக அழிக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் உணர்ந்து தீர்ப்பளித்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகோ அல்லது உரிய அரசு அதிகாரியோ, அல்லது அதிகார அமைப்போ அறிவிக்கை வெளியிட்ட பிறகு, தவறான கருத்துகள் ஏதேனும் தெரிவிக்கப்பட்டிருந்தால் – கருத்து தெரிவித்தவருக்கும் கருத்தைப் பகிர்ந்துகொண்டவர்களுக்கும் இடையில் பாலமாகச் செயல்படுவோர் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

உள்நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இணையதளங் களை முடக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69 (ஏ) பிரிவு செல்லும் என்றும் அந்த அமர்வு தெரிவித்துள்ளது. 69 (ஏ) பிரிவானது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான பாதுகாப்பு விதிகளும் வழிமுறைகளும் அந்தப் பிரிவிலேயே இருப்பதால் அது அப்படியே நீடிக்கலாம் என்று அமர்வு கருத்து தெரிவித்திருக்கிறது.

பேச்சு வகைகளில் 3 விதம் இருப்பதை நீதிமன்றம் வேறுபடுத்திக் காட்டுகிறது. ஒரு கருத்தைப் பற்றி அலசும் விவாதம் என்பது ஒரு வகை. ஒரு கருத்துதான் சரி என்று மற்றவர்களுக்கு எடுத்துக் கூறும் அல்லது வலியுறுத்தும் விதம் இரண்டாவது வகை. என்னுடைய கருத்துதான் சரி, அதைத்தான் ஏற்க வேண்டும் என்று கூறி அதற்கு ஆதரவாகப் பேசுமாறு மற்றவர்களைத் தூண்டிவிடுவது மூன்றாவது வகை என்று குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

ஒரு கருத்து பெரும்பாலானவர்களுக்கு ஏற்புடையதல்ல என்றாலும் அதைக் குறித்து விவாதிப்பதற்கும் அதை வலியுறுத்துவதற்கும் அரசியல் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவு வகை செய்கிறது. அந்த இரு நிலைகளைத் தாண்டி அதுவே மற்றவர்களைத் தூண்டிவிடும் தன்மையை எட்டும்போதுதான் 19(2) பிரிவு செயல்பாட்டுக்கு வருகிறது. 66(ஏ) பிரிவானது ஒரு கருத்தை அறிவதற்குத் தடையாக இருப்பதுடன் விவாதம் எது, கருத்தை வலியுறுத்துவது எது, தூண்டிவிடுவது எது என்பதைத் தெளிவுபடுத்துவதாகவும் இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அப்படியே சமூகத்தில் பிளவை அல்லது மோதலை ஏற்படுத்தும் கருத்து என்றால் அதை ‘நியாயமான அளவில் கட்டுப்படுத்துவது’ எப்படி என்பதில் சட்டம் தெளிவாக இல்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ராம் மனோகர் லோகியா வழக்கு

ராம் மனோகர் லோகியா (1960) தொடர்பான – முக்கியமான ஆனால் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட தீர்ப்பையும் உச்ச நீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியிருக்கிறது. பொது நன்மை கருதி எந்தக் கட்டுப்பாட்டை விதித்தாலும் அதுவும் அந்த நோக்கத்துக்கு அதாவது பொது நன்மைக்கு தொடர்புள்ளதாக இருக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு. பொது நன்மைக்கு சற்றும் தொடர்பில்லாமல், வேறு ஏதோ ஒரு நோக்கத்துக்காகவோ கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் அது செல்லத் தக்கதல்ல என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. அந்த வகையில், 19(2)-பிரிவின் இலக்கணப்படி 66(ஏ) இருக்கிறதா என்று அமர்வு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறது.

66(ஏ) தெளிவில்லாமலும் வரம்பு மீறியும் செயல்படுகிறது என்று கூறி அதைச் செல்லாது என்று அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தெளிவில்லாத இந்தச் சட்டப் பிரிவு தற்காலிக அடிப்படையிலும் அவரவர் கண்ணோட்டத்திலும் ஒரு செயல் சட்டப்படி செல்லத் தக்கதா, தடை செய்யத் தக்கதா என்று தீர்மானிக்கும் பொறுப்பை காவல்துறை, நீதிபதிகள், நீதித்துறை நடுவர்களிடம் விடுகிறது என்பது அமர்வின் கருத்தாகும். இதனால் விருப்ப அதிகாரப்படியும் எதேச்சாதிகாரமாகவும் செயல்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. 66(ஏ) எப்படி சமீபகாலத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பதிலிருந்தே இதை அறிந்துகொள்ளலாம். இணையதளத்தில் தெரிவிக்கப்படும் எல்லாக் கருத்துகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் 66 (ஏ) பெற்றுவிட்டது. ஆட்சியில் இருப்போருக்கு எதிரான கருத்து எதுவாக இருந்தாலும் ‘பொது அமைதியை சீர்குலைக்கும் கருத்து’ என்று அது குறித்து முடிவுக்கு வருவதற்கும் வகை செய்கிறது. இது இப்படியே நீடித்தால் பேச்சு சுதந்திரம் என்பதற்கே முற்றுப்புள்ளி வைப்பதாக உருவெடுத்திருக்கும்.

ஒரு கருத்திலிருந்து மாறுபடுவதும் அந்தக் கருத்தை விமர்சிப்பதும் கருத்துரிமையின் முக்கியமான அம்சங்கள். அடுத்தவர்களுக்கு எரிச்சல் ஊட்டுவது, புண்படுத்துவது என்ற வரையறையை மட்டுமே கையாண்டால் ஒருவர் பேசுவது மற்றொருவருக்கு எரிச்சலாக இருந்தாலும் புண்படுத்திவிட்டதாக மற்றவர் கூறினாலும் யாரும் எதையும் பேசாமல் இருக்க வேண்டிய தாகிவிடும் என்பதைத் தீர்ப்பு தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.

பெண்கள் முன்னேற்றப்பட வேண்டும், சாதிமுறை ஒழிக்கப்பட வேண்டும், மதம் மாற அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கருத்துகள் வேறு பிரிவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம், வேறு சிலருடைய மனங் களைப் புண்படுத்தலாம் எனும்போது 66(ஏ) எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

21-வது நூற்றாண்டில் பேச்சுரிமை

அரசியல் சட்டம் அளிக்கும் பேச்சுரிமைக்கு எதிராக இருக்கிறது என்று கூறி ஒரு சட்டப் பிரிவே செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் என்பது கவனிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இணையதளம், சமூக ஊடகங்கள் முக்கியத்துவம் பெற்றுவரும் 21-வது நூற்றாண்டில் பேச்சுரிமையை உறுதி செய்திருக்கிறது நீதிமன்றம். தகவல் தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக எவர் வேண்டுமானாலும் ஒரு பொருள் பற்றி கருத்து தெரிவிக்கலாம் என்ற ஜனநாயகப்படுத்தலை அங்கீகரித்திருப்பதுடன் அந்த உரிமையையும் பாதுகாத்திருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ஒரு இணையதளத்தை முடக்கும் அரசின் அதிகாரம் எப்படி எதேச்சாதிகாரமாக செயல்படுத்தப்படுகிறது என்பதையும் நீதிமன்றம் இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்திருக்கலாம். இந்தத் தீர்ப்புமே புதுவகை அரசியல் விழிப்புணர்ச்சியின் விளைவு என்று கூறலாம். மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், வலைதளப் பதிவர்கள், சமூக ஊடகவியலாளர்கள் என்று பலதரப்பட்டவர்களும் பேச்சுரிமையைக் காக்க ஒருசேர முன்வந்ததும் முக்கிய காரணம்.

இந்தத் தீர்ப்பு சுதந்திரமான பேச்சுரிமைக்கு புதிய வடிவத்தைக் கொடுத்திருக்கிறது, எதிர்காலத்தில் இன்னும் எவ்வளவு மாற்றங்கள் வரும் என்று காத்திருக்காமல், இந்தத் தீர்ப்பைக் கொண்டாடுவோம்.

66(ஏ) பிரிவின்படி மட்டும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை, அரசுக்கு எதிராகக் கலகம் செய்ததாகவும் வெறுப்பைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாகவும்கூட (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(ஏ), 295(ஏ)) குற்றப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மக்கள் அச்சமில்லாமல் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கும் சூழல் ஏற்பட வேண்டும் என்றால், கோபால கிருஷ்ண காந்தி குறிப்பிட்டதைப் போல ‘அறிவிக்கப்படாத அச்ச உணர்வோடே’ நாம் வாழ்கிறோம் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்; இந்தத் தீர்ப்பானது துணிவுமிக்க, சுதந்திரமான, சகிப்புத்தன்மையுள்ள ஜனநாயகத்தை நோக்கிய முதல் அடி என்பதே இதன் சிறப்பு.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), | சுருக்கமாகத் தமிழில் சாரி |

என்ன சொல்கிறது உச்ச நீதிமன்றம்:

*ஒரு விஷயத்தைக் குறித்து விவாதித்தல், அந்த விஷயத்தை ஆதரித்தல் ஆகிய இரண்டுமே எவ்வளவு விரும்பத் தக்கதாக இல்லாமல் போனாலும் கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகிய இரண்டுக்குமான உரிமையைப் பொறுத்தவரை அவைதான் உயிர்நாடி.

*பிரிவு 66-ஏ-வுக்கும் பொது அமைதிக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் கிடையாது.

*66-ஏவில் உள்ள விளக்கங்கள் சரியாக வரையறை செய்யப்படவில்லை; எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும் வகையில் அந்த விளக்கங்கள் இருக்கின்றன.

*அரசுகள் வரலாம் போகலாம். ஆனால், 66-ஏவுக்கு என்றுமே அழிவில்லை. இப்போது உள்ள அரசு 66-ஏவைத் தவறாகப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளிக்கலாம். ஆனால், அது அடுத்த அரசைக் கட்டுப்படுத்தும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

*கிட்டத்தட்ட எந்த விஷயத்தைப் பற்றிய எந்தக் கருத்துக்கும் எதிராக நடவடிக்கை எடுத்துவிட முடியும் என்ற அளவில் 66-ஏ பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது.

*தெளிவற்றதாகவும், அதீதமானதாகவும் தெரியக்கூடிய வகையில் ஒரு குற்றத்தை இந்தப் பிரிவு வரையறை செய்கிறது. ஆகவே, இது அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.

*நமது அரசிலமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்று வரும்போது கருத்துச் சுதந்திரம்தான் மிகவும் அடிப்படையானது.

*மாறுபட்ட கருத்துகளுக்கு இடமளிப்பது, பிறரால் விரும்பப்படாதவையாக இருந்தாலும் ஒருவர் தன்னுடைய கருத்துகளை வெளியிட அனுமதிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஜனநாயக நாட்டின் குடிமக்களான நாம் உணர வேண்டும்.

*விசாலமான பார்வை கொண்ட குடிமக்கள்தான் நல்ல ஆட்சிக்கான அஸ்திவாரம். தங்குதடையற்ற விதத்தில் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்படுவது அதற்கு மிகவும் அவசியம்.

*விவாதித்தல், ஆதரித்தல், தூண்டுதல் ஆகிய மூன்றும் சேர்ந்தவைதான் கருத்துரிமையும் பேச்சுரிமையும். தெரிந்து கொள்வதற்கான மக்களின் உரிமைக்கு இடமளிப்பது இணையமே. அதற்குள் மூக்கை நுழைக்கப் பார்க்கும் பிரிவுதான் 66-ஏ. தகவல் பரிமாற்றம், கருத்துப் பரவல் ஆகியவற்றில் ஈடுபடும் யாரையும் தண்டிக்கக் கூடிய வகையில் 66-ஏ இருக்கிறது.

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

– ஹரிஷ் சால்வே , முன்னணி வழக்கறிஞர்

நுணுகி ஆராய்ந்து, தர்க்கபூர்வமாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்தப்பட்டது இந்தத் தீர்ப்பு. கருத்துச் சுதந்திரம்தான் எந்த ஜனநாயகத்துக்கும் மையமானது. அதற்கு இந்தத் தீர்ப்பு உத்தரவாதம் அளித்திருக்கிறது.

– சோலி ஜே. சோரப்ஜி, முன்னாள் அட்டர்னி ஜெனரல்.

அநீதிக்கும் அராஜகத்துக்கும் எதிராகக் குரல்கொடுக்க நினைப்பவர்களுக்குக் கிடைத்த வெற்றி!

– ரீனு சீனிவாசன், சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே இறந்தபோது நடந்த கடையடைப்பை விமர்சித்து வெளியிடப்பட்ட ‘ஃபேஸ்புக்’ பதிவுக்கு ‘லைக்’ போட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டவர்.

கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றைப் பெறுவதற்கான மக்களின் உரிமைக்கும் கிடைத்த வெற்றி இது.

– அஸீம் திரிவேதி, அரசியலமைப்புச் சட்டத்தைக் கிண்டலடித்துக் கேலிச்சித்திரம் வரைந்ததாக 2012-ல் கைதுசெய்யப்பட்டவர்.

66-ஏ பிரிவு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியூட்டுகிறது எனக்கு. மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை அளிக்கக் கூடிய இந்தச் சட்டப் பிரிவில் நான் கைதுசெய்யப்பட்டதை இப்போது நினைத்தாலும் பகீர் என்று இருக்கிறது.

– சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆசம் கானுக்கு எதிராக ஃபேஸ்புக் பதிவிட்ட 12-ம் வகுப்பு மாணவன் தெரிவித்த கருத்து.

அந்தர் பல்டியின் காலம் இது!

66-ஏவுக்கு சாவு மணி அடித்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதற்கு ‘நீ, நான்’ என்று போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்களும் பாஜக தலைவர்களும். காங்கிரஸ் கட்சித் தலைமையிலான அரசு இந்தச் சட்டப்பிரிவைக் கொண்டுவந்தபோது காங்கிரஸ் தலைவர்களுக்கு இருந்தது இதே வாயா, இல்லை வேறு வாயா என்று தெரியவில்லை. அதேபோல், தங்களுக்கும் இந்தச் சட்டத்துக்கும் ஏதும் தொடர்பில்லை என்பதுபோல் முண்டா தட்டிக்கொண்டு முன்வரிசையில் வந்து வரவேற்கிறார்கள் பாஜக தலைவர்கள். கருத்துச் சுதந்திரத்தின் ஆதரவாளர்களாம் அவர்கள்! இரண்டு கட்சித் தலைவர்களின் அந்தர் பல்டியையும் இங்கே பாருங்கள்!

வீரப்ப மொய்லி, காங்கிரஸ்:

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். கருத்துரிமையைப் பெறும் வகையில் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்ப்பு இது.”

வீரப்ப மொய்லி சட்ட அமைச்சராக இருந்தபோதுதான் தகவல் தொடர்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 66-ஏ அமல்படுத்தப்பட்டது.

ரவி ஷங்கர் பிரசாத், பாஜக, தகவல் தொழில்நுட்பத் துறைக்கான அமைச்சர்:

சமூக ஊடகங்களில் நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்களை நாங்கள் மதிக்கிறோம். சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் நேர்மையான விமர்சனங்களையும் மாறுபட்ட கருத்துக்களையும் ஒடுக்குவதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

இந்தத் தீர்ப்புக்குச் சில நாட்கள் முன்னதாக “பிரிவு 66-ஏவைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளக் கூடாது’ என்று சொன்னவரும் இவர்தான்.

ப. சிதம்பரம், காங்கிரஸ்:

மிக மோசமாகத் தயாரிக்கப்பட்ட இந்தச் சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்திக்கொள்ள இடமளிப்பது. உண்மையில் சொல்லப்போனால் இந்தச் சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டு காலம் அமைச்சராக இருந்தவர் இவர். இந்தச் சட்ட அமலாக்கத்தின்போதும்தான். தன் மேல் ஊழல் புகார் தெரிவித்த ஒரு தொழிலதிபர் மீது இவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் 66-ஏவின் கீழ் வழக்குப் பதிவு செய்தததை நாம் மறந்துவிட வேண்டும்.

ராம் மாதவ், பாஜக:

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த காட்டுமிராண்டித்தனமான சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் முடிவுகட்டியிருக்கிறது.

மாநிலங்களிலும் மத்தியிலும் இந்தச் சட்டப் பிரிவை இதுவரை பாஜக தவறாகப் பயன்படுத்தியிருப்பதையெல்லாம் அழகாக மறந்துவிட்டிருக்கிறார் ராம் மாதவ்.

இப்படியெல்லாம் அந்தர் பல்டி அடிக்காதவர் ஆசம் கான் மட்டுமே. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் குறித்து அவர் சொல்லியிருப்பது: “நீங்களெல்லாம் குற்றவாளிகளை ஆதரிக்கிறீர்கள்!”

அருமையான தீர்ப்பு இது! அரசியல் சட்டத்தைக் கொண்டு நிறுத்துப் பார்க்கும்போது இந்தப் பிரிவு தப்பியிருக்குமென்றால் பேச்சு சுதந்திரத்துக்கு உத்தரவாதமளிக்கும் 19(1)(ஏ) பிரிவைக் குழிதோண்டிப் புதைத்திருக்க வேண்டியிருக்கும்.

தொகுப்பு: ஆசை

-தி இந்து

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *