நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார்?

Tamil_News_large_939456

புதுடில்லி : காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வில் முன்னாள் நிதியமைச்சர்கள் யாரும் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளனர். இதனால் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யாராக இருக்கக் கூடும் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இருப்பினும், இரண்டில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் நிதியமைச்சர் பதவியில் புதிய முகத்தை காணக்கூடும் என கூறப்படுகிறது.

விலைவாசி உயர்வு, குறிப்பாக வெங்காயம், தானியங்கள் ஆகியவற்றின் விலை உயர்வு தொடர்பாக விவகாரம் கடந்த தேர்தல்களில் மிகப் பெரிய மாற்றங்களையும், திருப்பங்களையும் ஏற்படுத்தியது. வேலைவாய்ப்பு மிகப் பெரிய விஷயமாக பேசப்பட்ட போதிலும், பொருளாதார விவகாரம் எந்த தேர்தலிலும் எதிரொலிக்கவில்லை. பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிவு பெரும்பாலான மக்களுக்கு இல்லாமல் இருந்ததே இதற்கு முக்கிய காரணம். ஆனால் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் இருப்பதால் வேலைவாய்ப்புக்கள் குறைந்துள்ளது என்பது தெரியும். முந்தைய தேர்தல்களைப் போல் அல்லாமல், பணவீக்கம், ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி உள்ளிட்ட பொருளாதார பிரச்னைகள் மக்கள் மனதில் ஆதிக்கம் பெற்றுள்ளன.இதனால் அடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பதும், நாட்டின் முக்கிய துறையான நிதித்துறையை நிர்வகிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள் என்பதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

1991ம் ஆண்டு முதல் நிதித்துறையில் சீர்திருத்தங்கள் ஏற்பட துவங்கி விட்டன. நிதியமைச்சர்களாக இருந்த மன்மோகன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, யஸ்வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் நிதித்துறையில் சீர்திருத்தங்கள் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர்கள். பல்வேறு காரணங்களால் இவர்களில் யாரும் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பதை விட நிதித்துறை, அனுபவம் இல்லாத ஒரு அரசியல்வாதியிடம் ஒப்படைக்கப்பட்டால், அது புதிய அரசின் செயல்பாடுகளையும் நாட்டையும் பெரிய அளவில் பாதிக்கக் கூடும். இதனால் அடுத்த பிரதமர் யார் என்பதை விட, அடுத்த நிதியமைச்சர் யார் என்பதே நாடு தற்போது சந்தித்து வரும் நிலைக்கு முக்கியமானதாக உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அருண் ஜெட்லியிடம் நிதித்துறை வழங்கப்படலாம். பா.ஜ., ஆட்சியின் போது பொருளாதார துறை அமைச்சகத்தை வெற்றிகரமாக நிர்வகித்து பல முதலீடுகளை கொண்டு வந்துள்ளார். அருண் ஜெட்லி தவிர நிதியமைச்சர் பதவியை தர பா.ஜ., அரசுக்கு இருக்கும் அடுத்த வாய்ப்பு, அருண் ஷோரி. பத்திரிக்கையாளராகவும், எழுத்தாளராகவும் இருந்துள்ள அருண் ஷோரி, உலக வங்கியின் பொருளாதார முதலீட்டு பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் நிதியமைச்சரானால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்லும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1991ம் ஆண்டு மன்மோகன் சிங் முதல் பிரணாப் முகர்ஜி வரையிலான நிதியமைச்சர்களும், மான்டேக் சிங் அலுவாலியா, ரங்கராஜன் உள்ளிட்ட பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர்களும் நாட்டின் பொருளாதார சீர்திருத்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அதே சமயம், இந்த குழுவினர் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான பொருளாதார நிலைப்பாட்டை சமநிலையில் கொண்டு செல்லாததே நாடு தற்போது சந்தித்து வரும் நிலைக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதார கொள்கையில் ஏற்பட்ட குறைபாடு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உள்ளிட்ட ஊழல் பட்டியல் ஆகியன நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளன.

1998 முதல் 2004ம் ஆண்டு வரையிலான பா.ஜ., ஆட்சியிலும் சிறப்பான பொருளாதார அணி இருந்தது. யஸ்வந்த் சின்கா நிதியமைச்சராக இருந்த போது அந்நிய முதலீடு, காப்பீட்டு துறை ஆகியவற்றில் 2ம் தலைமுறைக்கான பொருளாதார மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. சின்காவிடம் இருந்து ஜஸ்வந்த் சிங்கிடம் நிதித்துறை ஒப்படைக்கப்பட்ட போது, பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி கண்டது. இருப்பினும் உணவு பொருட்களின் விலை ஏற்றம் பா.ஜ., ஆட்சிக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து அவர்கள் ஆட்சியை இழக்க காரணமாகவும் இருந்தது. இதே போன்று தற்போது ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு நடப்பு காங்கிரஸ் அரசுக்கும் மிகப் பெரிய சவாலாக உள்ளது

தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP