நிலைகுலைந்திருக்கும் சிபிஐ: கட்சி அரசியல் குறுக்கீடுகளிலிருந்து அமைப்புகளை விடுவியுங்கள்

நாட்டின் உயர் புலனாய்வு அமைப்பான சிபிஐக்குள் நடந்துகொண்டிருக்கும் அசிங்கங்கள் நாட்டையே அதிரவைத்திருக்கின்றன. ஒரு நள்ளிரவில் நடந்த திடீர் மாற்றங்கள் பல விஷயங்களை அம்பலமாக்கியிருக்கின்றன. சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இருவரும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு, பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு, அந்தப் பொறுப்புகள் புதியவர் ஒருவரின் கைகளில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் இடையேயான பனிப்போர் என்பதைத் தாண்டி, மோடி அரசு மீதான ரஃபேல் விமான பேர ஊழல் புகாரோடும் இந்த விவகாரம் தொடர்புபடுத்திப் பேசப்படுவது நாட்டின் உயர் அமைப்புகளிடம் மக்கள் வைத்திருக்கும் நம்பகத்தன்மை மீதான மோசமான தாக்குதலாக மாறியிருக்கிறது.

சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மாவுக்கும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே தொடக்கத்திலிருந்தே பனிப்போர் நிலவிவந்தது. முன்னதாக, சிறப்பு இயக்குநர் பதவிக்கு அஸ்தானாவை நியமிக்கும்போதே அவர் தகுதியற்றவர் என்று கடுமையாக ஆட்சேபித்தார் அலோக் வர்மா. இந்த ஆட்சேபத்தை மத்திய அரசும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும் புறக்கணித்ததே வினோதமானதுதான். அஸ்தானா பொறுப்பேற்றது முதலாக அவருக்கும் அலோக் வர்மாவுக்கும் இடையே பல்வேறு வழக்குகளிலும் கருத்து வேறுபாடுகள் நிலவியதாகவும், கீழே பணியாற்றுவோர் மத்தியிலும் இந்த வேறுபாடு பரவியதாகவும் பேசப்பட்டுவந்தது. உச்சகட்டமாக, பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்த விவகாரம் இப்போது சந்திக்கு வந்திருக்கிறது.

மாநிலங்களில் எந்த ஊழல் நடந்தாலும், கட்சி வேறுபாடு இல்லாமல் ‘சிபிஐ விசாரணை வேண்டும்’ என்று கோருகின்றன எதிர்க்கட்சிகள். அதேசமயம், தேசிய அரசியலில், எதிர்க்கட்சிகளால் சிபிஐ அதிகம் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டே ஆளும் கட்சியின் கைப்பாவையாக அது செயல்படுகிறது என்பதுதான். உண்மையில், சிபிஐயின் பலமும் பலவீனமும் இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் இருப்பதாகவே நாம் சொல்ல வேண்டும். அதேபோல, ஊரிலுள்ள ஊழல் வழக்குகளையெல்லாம் விசாரித்தாலும், சிபிஐயும் ஊழலுக்கு அப்பாற்பட்ட அமைப்பில்லை என்ற பேச்சும் நெடுநாளாகவே இருந்துவந்தது. சில ஆண்டுகளாகவே இதையெல்லாம் உறுதிப்படுத்தும் நிகழ்வுகள் உயர் நிலையிலேயே வெளிப்பட்டன.

முன்னதாக, சிபிஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா இருந்தபோது, சில வழக்குகளில் சிக்கியிருந்த எதிரிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. “விசாரணைகளில் ரஞ்சித் சின்ஹா குறுக்கிட்டது முதல் நோக்கிலேயே தெளிவாகத் தெரிகிறது” என்று உச்ச நீதிமன்றமே கருதியதால்தான், அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கின் விசாரணையிலிருந்து விலகியிருக்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதேபோல அவருக்கு அடுத்து சிபிஐ இயக்குநராக இருந்த ஏ.பி.சிங், இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியுடன் தொடர்பில் இருந்ததற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இப்போதும் மொயின் குரேஷியின் வழக்குதான் சிபிஐ தலைமையை நிலைகுலைய வைத்திருக்கிறது.

மொயின் குரேஷி வழக்கை அஸ்தானா தலைமையிலான குழுதான் விசாரித்துவந்தது. இந்த விசாரணைக் குழுவில் முக்கியப் பொறுப்பில் துணைக் கண்காணிப்பாளர் தேவேந்திரகுமார் இருந்துவந்தார். குரேஷியின் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் சனா என்பவரை இந்தக் குழுவினர் கைதுசெய்தனர். “இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சமாகக் கேட்டார்” என்று தொழிலதிபர் சனா வாக்குமூலம் தந்திருக்கிறார் என்று இவர்கள் கூறினர். இரு மாதங்களுக்கு முன்பு இதன் அடிப்படையில் ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம், அலோக் வர்மாவுக்கு எதிராகப் புகார் அளித்தார் அஸ்தானா.

இந்நிலையில், குரேஷியின் வழக்கில் சட்ட விரோதச் செயல்பாடுகளுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட மனோஜ் பிரசாத் என்பவர் சிபிஐயால் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வழக்கிலிருந்து சனாவை விடுவிக்க அஸ்தானாவுக்கும், தேவேந்திரகுமாருக்கும் ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், அலோக் வர்மாவுக்கு எதிராக சனா வாக்குமூலம் அளித்ததாகச் சொல்லப்படும் நாளில் அவர் அந்த ஊரிலேயே இல்லை என்றும், சனா அளித்ததுபோல போலியான வாக்குமூலத்தை தேவேந்திரகுமார் தயாரித்தது தெரியவந்திருக்கிறது என்றும் சொல்லி, தேவேந்திரகுமாரைக் கைதுசெய்ததோடு, அஸ்தானா மீதும் வழக்குப் பதிந்தது சிபிஐ. இந்தச் செய்தி உண்டாக்கிய பரபரப்பின் விளைவாக அலோக் வர்மா, அஸ்தானா இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியதோடு, சிபிஐ இயக்குநர் பொறுப்பை நாகேஸ்வர ராவிடம் ஒப்படைத்தது மோடி அரசு.

இதுவரை இந்த விவகாரம் முழுக்கவுமே இரு அதிகாரிகள் இடையேயான பனிப்போராக மட்டுமே பார்க்கப்பட்டுவந்த நிலையில், ரஃபேல் விவகாரத்தோடு இதை இணைத்தன எதிர்க்கட்சிகள். “ரஃபேல் போர் விமான ஊழல் குறித்த ஆவணங்களை சிபிஐ இயக்குநர் அலோக் குமார் திரட்டியுள்ளார். அதனால்தான், அவரைக் குறிவைத்துத் தாக்கியிருக்கிறது மத்திய அரசு. சிபிஐ இயக்குநரை நியமிப்பது, நீக்குவது இரண்டும் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மூவரும் இணைந்த குழு மேற்கொள்ள வேண்டியது. சிபிஐ இயக்குநரைக் கட்டாய விடுப்பில் செல்ல தன்னிச்சையாக உத்தரவிட்டதன் மூலம் அரசியலமைப்பை அவமதித்துவிட்டார் மோடி. கூடவே, சிபிஐ அமைப்பின் தன்னாட்சியையும் குலைத்துவிட்டார்” என்று குற்றம்சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

விவகாரம் இப்போது உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறது. தன் மீதான நடவடிக்கை சட்ட விரோதம்; இது சிபிஐயின் சுதந்திரத்தையும் தன்னாட்சியையும் பாதிக்கும் என்று கூறி வழக்கு தொடர்ந்திருக்கிறார் அலோக் வர்மா. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறும், சிபிஐ இயக்குநர் – சிறப்பு இயக்குநர் இருவரும் பரஸ்பரம் சாட்டிக்கொண்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணையை முடித்து, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் இரு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறும் உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இருவரில் யார் மீது தவறு என்று நிரூபிக்கப்பட்டாலுமே, சிபிஐக்கு அவமானம் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

ஆள்பவர்கள் நாட்டின் மதிப்புவாய்ந்த நிறுவனங்களைத் தங்கள் வசதிக்கேற்ப வளைக்கும்போது, அமைப்புக்குள் ஏற்படும் திருகல் கொஞ்சம் கொஞ்சமாக முற்றி, கடைசியில் இந்நிலையில்தான் வந்து நிற்கும். சிபிஐயில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களின் அவசியத்தை இன்றைய சூழல் துல்லியமாக உணர்த்துகிறது. என்னென்ன சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.எஸ்.வர்மா பட்டியலிட்டிருக்கிறார். முக்கியமாக, நிர்வாக அதிகாரமும் நிதிச் சுதந்திரமும் சிபிஐக்கு அவசியம். மத்திய தேர்தல் ஆணையம், தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்புபோல சட்டமியற்றி உருவாக்கப்பட்டதல்ல சிபிஐ. எனவே, சிபிஐ சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஆளுங்கட்சி தன்னுடைய கைப்பாவைகளாக நிறுவனங்களை அணுகும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலிருந்தே அதைத் தொடங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP