ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை: ஜி-7 நாடுகள் முடிவு

russia flag

வாஷிங்டன்

உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக அந்த நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஜி-7 நாடுகள் தீர்மானித்துள்ளன.

இது குறித்து, ஜி-7 அமைப்பில் இடம்பெற்றுள்ள கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஆகியோரும் இணைந்து கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

உக்ரைனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷியாவின் தலையீடு மேலும் அதிகரித்தால் பொருளாதாரத் தடையின் இலக்கையும் விரிவுபடுத்தும் முனைப்புடன் உள்ளோம்.

அதே வேளையில், உக்ரைன், அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை

ஜெனீவாவில் கடந்த 17ஆம் தேதி மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி உக்ரைனில் அரசியலமைப்புச் சீர்திருத்தம், அரசு கட்டடங்களைக் கைப்பற்றியுள்ள ரஷிய ஆதரவாளர்களுக்கு பொதுமன்னிப்பு அளிப்பது, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து செயலாற்றுவது போன்றவற்றில் உக்ரைன் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.

ஆனால், ஜெனீவா ஒப்பந்தத்தை மதித்து உறுதியான நடவடிக்கைகளை ரஷியா மேற்கொள்ளவில்லை.

உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு நேரடியாக உதவாவிட்டாலும், அவர்களின் கோரிக்கைகளுக்கு ரஷியா மறைமுக ஆதரவு அளித்து வருவதுடன், அந்நாட்டு எல்லையில் படைகளை குவித்து போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

கிரீமியா மற்றும் செவஸ்டோபோல் ஆகியவற்றை சட்டத்துக்குப் புறம்பாக ரஷியா இணைத்துக் கொண்டதை ஜி-7 நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒபாமா ஆலோசனை: இதனிடையே அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இத்தாலி பிரதமர் மாத்யூ ரென்ஸி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோருடன் கிழக்கு உக்ரைன் பகுதியில் போர் மேகம் நிலவுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

அந்தப் பகுதியில் ரஷியாவின் தற்போதைய நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அவர்களிடம் ஒபாமா தெரிவித்தார்’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP