வடகிழக்கில் பாஜகவின் நெகிழ்வுத்தன்மை தேர்தலில் அறுவடையாகுமா?

 

டகிழக்கு மாநிலங்களில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 22-ல் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது பாஜக. இதற்காக, தற்காலிக சமரசங்களுக்கும் அக்கட்சி தயங்கவில்லை. எனினும், வடகிழக்கு மாநிலங்கள் சார்ந்த பிரத்யேகப் பிரச்சினைகள், அவை தொடர்பாக பாஜகவின் அணுகுமுறை போன்றவை இந்தத் தேர்தலில் பிரதானமாக எதிரொலிக்கும் என்றே தெரிகிறது.

2014 மக்களவைத் தேர்தலில் அசாமின் 14 தொகுதிகளில், ஏழு இடங்களில் வென்றதன் மூலம் வடகிழக்கில் கால்பதித்தது பாஜக. பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெறத் தொடங்கியது. 2016-ல் அசாமில் வென்றது. திரிபுராவில் ஐந்து முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த இடது முன்னணி ஆட்சியை, 2018 தேர்தலில் வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது. இன்றைக்கு வடகிழக்கின் எட்டு மாநிலங்களில் நான்கில் பாஜக ஆட்சி நடக்கிறது. மூன்று மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி.

இந்நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த குடிமக்கள் (திருத்த) மசோதா வடகிழக்கில், பிராந்தியக் கட்சிகளின் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறது, பாஜக கூட்டணிக் கட்சிகள் உட்பட. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து 2014-க்கு முன்னால் இந்தியாவில் புகலிடம் தேடி வந்த இந்துக்கள், சமணர்கள், பெளத்தர்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்க வழி செய்யும் இம்மசோதாவுக்கு எதிராகப் பல்வேறு கட்சிகள் போராடிவருகின்றன. மசோதாவைக் கண்டித்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது அசாம் கண பரிஷத் கட்சி. பாதிப்பு நிச்சயம் என்பதை உணர்ந்ததும் அக்கட்சியைச் சமாதானப்படுத்தி, கூட்டணியில் மீண்டும் சேர்த்திருக்கிறது பாஜக. போடோலாந்து மக்கள் முன்னணி, திரிபுராவின் பூர்வகுடி மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி என்று பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியை இறுதிசெய்தும்விட்டது.

இதற்காக, மாட்டிறைச்சி விவகாரம் போன்றவற்றில் தீவிரம் காட்டுவதையும் தற்சமயத்துக்கு நிறுத்திவைத்திருக்கிறது. குடிமக்கள் (திருத்த) மசோதாவைப் பற்றித் தேர்தல் முடியும் வரை வாய் திறக்காமல் இருப்பது எனும் முடிவிலும் உறுதியாக இருக்கிறது. இந்த விவகாரங்களில் பாஜகவின் தீவிரத்தன்மையை மட்டுப்படுத்தும் நோக்கில் அதன் கூட்டணிக் கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. இதற்கிடையே, மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் அருணாசல பிரதேச பாஜகவில் இடம் கிடைக்காததால் அக்கட்சியிலிருந்து 25 தலைவர்கள் வெளியேறியிருக்கிறார்கள். ஆக, பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் வடகிழக்கில் களம் காண்கிறது பாஜக. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பிரச்சினைகளின் தீவிரமும் திசையும் தெரிந்துவிடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP