வானத்தை வசப்படுத்திய அக்னிச் சிறகு

APJ ABDUL KALAM

சிலரைப் பார்க்கும்போது சாதிக்கலாம் என்று தோன்றுகிறது. சிலரைப் பார்க்கும்போது சாதித்த விதத்தை, அவர்கள் நமக்குப் போதிக்கலாமே என்று கேட்கத் தோன்றுகிறது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஆவுல் பகீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ‘கலாம் அய்யா போல் சாதிக்கலாம்’ என்ற எண்ணம் நமக்குள்ளும் வருகிறது. காலம், காகிதத்தைக் கிழிப்பதாய் நினைத்து ஒரு கவிதையைக் கிழித்துவிட்டது.
எப்படி மனம் வந்தது எமனுக்கு?

மாணவர்களின் ஆத்மார்த்தமான பேராசிரியர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், கடந்தவாரம் திண்டுக்கல் வந்து தனக்கு 1950 முதல் 1954 வரை திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் பாடம் கற்றுத்தந்த 95 வயது ஆசிரியர், சின்னதுரை அவர்களைச் சந்தித்துக் கண்ணீரோடு பேசிச்சென்றதன் பொருள் இப்போது புரிகிறது, அதுதான் இறுதிவிடைபெறுதல் என்பது. இறப்பதற்கு முன்னும் தன் அருமை ஆசிரியரைச் சந்தித்து அவரின் கரம்பற்றிக் கண்களில் நீர்கசிய விடைபெறத்தான் திண்டுக்கல் வந்தார் என்று எப்படித் தெரியாமல் போனது? எமனுக்கு எப்படி மனம் வந்தது இப்படிப்பட்ட மாமனிதனின் உயிரை எடுக்க?

கலாமின் பள்ளிக்காலம்:

தமிழகத்தின் ரம்யமான தீவான ராமேஸ்வரம் தீவில், 1931 ஆம் ஆண்டு அக்., 15 ஆம் நாள், பிறந்தவர் அப்துல்கலாம். படகை வாடகைக்குவிடும் தொழில்செய்த ஜெய்னுலாபுதீன் மரைக்காயர் ஆஷியம்மாவின் அருமை மகனாகப் பிறந்த ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், குழந்தை நாட்களை வறுமையில் கழித்தார். தந்தையின் குறைந்த வருமானம் குடும்பச் செலவுகளுக்குப் போதாதபோது அப்துல்கலாம், வீடுவீடாகச் செய்தித்தாள் வினியோகித்து தன் தந்தைக்கு உதவினார். பின்நாளில் அவர் அதே செய்தித்தாள்களில் தான் தலைப்புச்செய்தியாய் மாறப்போகிறோம் என்று தெரியாமல்.ராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் பயின்றபோது, ஏணியாய் தன்னை உயர்த்த, தனக்கு உதவிசெய்த ஆசிரியர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார். தந்தையோடு அதிகாலையில் எழுந்து வழிபாட்டிற்குச் செல்லும்போது ரம்யமான அந்த நீலத்திரைக் கடல் மீது பறந்து செல்லும் பறவைகளை வியப்போடு பார்த்திருக்கிறார். அந்தப் பறவைகள் பறப்பதைபோல் பறக்கும் விமானங்களைத் தயாரிக்கும் படிப்பைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்பள்ளி நாட்களிலேயே கலாமுக்கு இருந்தது.

ஒளிபாய்ந்த நாட்கள்:

விழிகளில் விளக்கைக் கொண்டவரின் பாதை என்ன இருட்டாகவா இருக்கும்! திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து சிறப்பாகப் பயின்று, 1954 ஆம் ஆண்டு இளம் அறிவியல் இயற்பியல் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டுகளில் அவர் கண்ட கனவு நனவானது. எம்.ஐ.டி., எனும் தொழில்நுட்பக் கல்வியகத்தில் விண்வெளிப் பொறியியல் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

வறுமையிலும் செம்மை:

எம்.ஐ.டி., யில் அப்துல்கலாம் பயின்று கொண்டிருந்தபோது, அவரது தந்தையின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, என்ற தகவல் வந்தது. ஊருக்குப் போவதற்குப் பணமில்லை, பலரிடம் கேட்டுப் பார்த்தார், யாரும் பணம் தரவில்லை. இறுதியாய், எம்.ஐ.டி.,யில் அவர் முதல் வருடம் நன்றாகப் படித்ததற்காக அந்நிறுவனம் அளித்த பரிசான விலையுயர்ந்த நூலைச் சென்னையில் உள்ள மூர்மார்க்கெட்டில் இருந்த பழைய நூல்களை வாங்கும் கடையில் கண்ணீரோடு விற்பனைக்குத் தந்தார். முதல்பக்கத்தில் கலாமின் பெயர் இருந்ததைக்கண்ட கடைக்காரர்,” அன்பாகப் பரிசாகக் கல்விநிறுவனம் தந்த இந்த நூலை இப்போது விற்கவேண்டிய அவசியம் என்ன தம்பி? என்று கேட்டார்.”ராமேஸ்வரத்தில் உள்ள என் அன்புத்தந்தையாருக்கு உடல்நிலை சரியில்லை, அவரை உடனே நான் பார்க்கவேண்டும், என்னிடம் பேருந்துக் கட்டணத்திற்குக்கூடப் பணமில்லை அதனால்தான் எனக்குக்கிடைத்த பரிசு நூலை நான் விற்கவேண்டிய இக்கட்டான சூழல் வந்தது” என்று கலாம் கூற,அக்கடைக்காரர் கண்களில் கண்ணீர். ”தம்பி!உன் புத்தகத்தை நீ விற்கவேண்டாம்… உன் பயணச் செலவுகான பணத்தை நான் தருகிறேன், நீ ஊருக்குப் போய்வந்து நான் தந்த பணத்தைத் திரும்பத் தரலாம்.” என்று பணம் தந்து அனுப்பிவைக்கிறார். அந்தப்புத்தகக் கடைக்காரரை மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் நினைவுகூர்ந்து நெகிழ்வோடு நன்றிகூறினார் கலாம். வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்து நன்றி மறவாப்பண்பின் புகலிடமாய் அப்துல் கலாம் திகழ்கிறார்.

வானம் வசப்பட்டது:

1960 ஆம் ஆண்டு கலாம், இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி மேம்பாட்டுப் பிரிவில் முதன்மை விஞானியாகப் பணிக்குச் சேர்ந்தார்.இந்திய ராணுவத்திற்கான ஹெலிகாப்டர் தயாரிப்பில் அவர் பணி தொடங்கியது.எப்போதும் ஆழமாய் சிந்தித்து உறுதியாய் செயல்படும்,தேசம் மீது பாசம் கொண்ட பாரதத் தாயின் அன்புமகனாகக் கலாம் திகழ்ந்தார்.பிரபலவிஞ்ஞானி விக்ரம் சாராபாயின் ஆதரவு அவரைப் பட்டை தீட்டியது.
இந்தியவிண்வெளி ஆய்வுநிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் விஞ்ஞானியாகப் பணிபுரியத் தொடங்கியபின் இந்தியாவின் புகழ் உலகம் முழுக்கப் பரவியது. வெளிநாடுகளின் உதவியில்லாமல் உள்நாட்டிலே செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட வேண்டுமென்று விரும்பினார். உள்நாட்டுசெயற்கைக்கோள் பாய்ச்சுவாகனம் எஸ்.எல்.வி.3 திட்டத்தின் இயக்குனராய் சாதித்தார்.கொடிகட்டிப் பறந்த விண்வெளித் துறைரோகினி செயற்கைக்கோள் கலாமின் வெற்றியைத் தாங்கி மேலெழும்பி புவியின் சுற்றுவட்டப் பாதையில் கம்பீரமாய் சுற்றத்தொடங்கியது. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை அவரது வழிகாட்டலில் விஞ்ஞானிகள் உருவாக்கினர். அக்னியும், பிரித்வியும் முத்திரை பதித்தன. விண்வெளித்துறையில் மட்டுமல்லாமல் அணுசக்தித் துறையிலும் ‘புத்தர் சிரிக்குமளவு’ முத்திரை பதித்தார்.சேவையின் தேவைபோலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அணியக்கூடிய உலோகச் சட்டத்துடன் கூடிய காலணியின் அதிகப்படியான எடையால் அவர்கள் நடக்கத் துன்புறுவதைக்கண்டு, மிகஎளிய எடை கொண்ட உலோகத்தால் உருவாக்கி மாற்றுத்திறனாளிகளின் மனதில் இடம்பிடித்தார்.

எளிமைத்தலைவர்:

குழந்தைகள் மீது பேரன்பு கொண்ட மகத்தான தலைவராய் கலாம் திகழ்ந்தார். எங்கே சென்றாலும் குழந்தைகளைச் சந்திப்பதையும் அவர்களை உற்சாகப்படுத்துவதையும் கடமையாகக் கொண்டார். இந்தியா- 2020 என்ற கனவு நம் தேசம் குறித்த அவரது தொலைநோக்கினை விளக்குகிறது. அக்னிச் சிறகுபூட்டி அவர் கனவுகள் வான்நோக்கி உயர்ந்தன. வெளிச்சத் தீப்பொறிகளோடு அவை வானில் மின்னின. புத்தாயிரத்தில் இந்தியா அடியெடுத்து வைத்தபோது அவரது சிந்தனை தீபத்தில் ஒளிச்சுடர் ஏற்றியது. ஜனாதிபதி மாளிகையிலும் எளிமையைக் கடைபிடித்த பண்பாளர், பாட்டாளி மக்களை நேசித்த அன்பாளர். கலைரசனை அவர் உடன்பிறந்த பண்பு. தன் மனதில் உதித்த எண்ணங்களை அழகு கவிதைகளாய் வடிப்பதில் கைதேர்ந்தவர். இனிய இசைக்கலைஞர், வீணை வாசிப்பதில் வல்லவர். அவர் ஏவிய ஏவுகணைகளைப் போல் அவர் எண்ணங்களும் உயரப்பறக்கவே செய்கின்றன.

நம்பிக்கை நாற்று:

கலாமிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடம், ”செய்வன திருந்தச் செய்” என்பதாகும். ஜனாதிபதியாய் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தாரோ அதைவிட அண்ணா பல்கலையில் பேராசிரியராக மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைந்தார். தொடர்ந்து கற்பதிலும் கற்பிப்பதிலும் அவருக்குநிகர் அவர்தான். அவர் பொன்மொழிகள் மகாகவி பாரதியின் உறுதியை நமக்கு நினைவுபடுத்தும், ”நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம்விட நீ சிறந்தவன், உயர்ந்தவன் என்ற உறுதிவேண்டும். இன்னல்களும் பிரச்னைகளும் நாம் வளர்ச்சியடைவற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை.” என்று ரத்தினவரிகளை நம்பிக்கையோடு சொல்கிறார் கலாம். அவரைப்போன்ற ஒப்பற்ற மாமனிதர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நாம் பெற்ற பெரும்பேறு. அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோமாக.
முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
திருநெல்வேலி.

– தினமலர்

1 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP

Subscribe To Our Newsletter
அனைத்து முன்னணி தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் டிவி சேனல்களிலிருந்தும் சமீபத்திய செய்திகளைப் பற்றிய புதுப்பிப்புகளைப் பெற இன்று எங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு பதிவுசெய்யவும் !
Thanks for signing up. You must confirm your email address before we can send you. Please check your email and follow the instructions.
உங்கள் தனியுரிமையை நாங்கள் மதிக்கிறோம். உங்கள் தகவல் பாதுகாப்பானது மற்றும் ஒருபோதும் பகிரப்படாது.
Don't miss out. Subscribe today.
×
×
WordPress Popup