டெல்லியில் 2005-ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்ட இருவர் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து விடுவித்திருக்கிறது டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம். 67 பேர் கொல்லப்பட்ட, 200-க்கும் அதிகமானோர் காயமடைந்த குண்டுவெடிப்பு இது. காஷ்மீரைச் சேர்ந்த முகமது ஹுசைன் ஃபாஸ்லி, முகமது ரஃபிக் ஷா, தாரிக் அஹமது தார் ஆகியோர் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் தாரிக் அஹமது தார் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றாலும், பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் அவரைக் குற்றவாளி என்று நீதிபதி ரீதிஷ் சிங் தீர்ப்பளித்திருக்கிறார். அதேசமயம், முகமது ஹுசைன் ஃபாஸ்லி, முகமது ரஃபிக் ஷா ஆகிய இருவரையும் அவர் விடுவித்ததோடு, இந்த வழக்கில் அரசுத் தரப்பின் தவறுகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டின்பேரில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சிறையில் அடைபட்டுக் கிடந்த இரு இளைஞர்கள், இனி சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் என்பது உவகை அளித்தாலும், தவறான தகவல்களின் அடிப்படையில் புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொள்வதையும் அப்பாவிகள் பாதிப்புக்குள்ளாவதையும் எப்போது நாம் தடுக்கப்போகிறோம் எனும் கேள்வியை இத்தீர்ப்பு ஆழமாக எழுப்புகிறது. பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான வழக்குகளில் முறையான விசாரணை நடத்துவதில் இந்திய விசாரணை அமைப்புகள் தொடர்ந்து தவறுவதையும், இந்த வழக்குகளில் அப்பாவிகளைச் சிக்கவைப்பதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஏனென்றால், இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. இந்தச் சம்பவத்தையே எடுத்துக்கொண்டால், குண்டுவெடிப்பை நடத்தியது யார் என்பதை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு எவ்வளவு மோசமாகத் தோல்வியடைந்திருக்கிறது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இவ்விவகாரத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்புகளிடம் பெரும் மாற்றத்தை உருவாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம்.

கிடைக்கும் நம்பகமான துப்பு மூலம், பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்களை நெருங்கும் வகையில், சிறப்பான விசாரணை நடத்தினால்தான் உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க முடியும். ஆனால், பல சமயங்களில் அது நடப்பதில்லை. புலனாய்வு அமைப்புகள் செய்யும் இதுபோன்ற தவறுகள், அப்பாவிகளின் வாழ்க்கையையே சீர்குலைத்துவிடுகின்றன. இந்த வழக்கில் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் முகமது ரஃபீக் ஷா, 2005-ல் கைதுசெய்யப்பட்டபோது ஒரு கல்லூரி மாணவர்.

முகமது ஹுசைன் ஃபாஸ்லி தரைவிரிப்பு தயாரிக்கும் நெசவாளி. நியாயத்துக்குப் புறம்பாக இத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட இருவருக்கும் என்ன இழப்பீடு வழங்கிவிட முடியும்? 67 பேரின் உயிரைப் பலிகொண்ட குண்டுவெடிப்பு சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகளை எப்போது பிடிப்பது? தெரிந்தே தவறிழைக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இதையெல்லாம் எப்படி அறவுணர்வுள்ள ஒரு அரசும் பொதுச் சமூகமும் துளி குற்றவுணர்வுமின்றி மௌனமாகக் கடந்துபோக முடியும்?

 -தி இந்து

Tags – innocents punished by indian court, muslims arrested, police would be liable, false conviction, delhi court, supreme court

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *