Contamination in india shops

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட காரீயத்தின் அளவு அதிகமாக உள்ளதாக நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸின் மீது எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், நாம் சந்தைகளில் வாங்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே பாதுகாப்பானது தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாம் அன்றாடம் கடைகளில் வாங்கும் பொருட்களில் குறிப்பிடத்தக்க அளவிலான பொருட்கள் உட்கொள்வதற்கு உகந்தது இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

ஆம், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்புச் சார்பில் எடுக்கப்பட்ட 2014-15 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஆய்வுக் கூட சோதனை முடிவின்படி பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 42,290 மாதிரிகளில் 8,469 மாதிரிகள் தரமற்றவை, கலப்படம் செய்யப்பட்டவை, முறையான பிராண்ட் இல்லாதவை எனத் தெரியவந்துள்ளது.

தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட உணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கு கலப்படமானவை என்பது தெரியவந்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டது குறைவே:

சந்தைகளில் கலப்பட உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது தொடர்பான வழக்குகளில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டவை மிகக் குறைவே. 2014-15 காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தரமற்ற 8,469 மாதிரிகளில் 1,256 மாதிரிகளை தயாரித்த நிறுவனங்களே குற்றம் புரிந்தது உறுதி செய்யப்பட்டது. தவறு செய்த நிறுவனங்களிடம் இருந்து ரூ.6.9 கோடி அபராதத் தொகை பெறப்பட்டுள்ளன. மேலும் அந்த அறிக்கையில் 14 மாநிலங்களின் ஆய்வு முடிவுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் படி உணவுப் பொருட்கள் மக்கள் உட்கொள்வதற்கு உகந்ததாக இருப்பதை சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என வரைமுறை வகுத்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள புள்ளிவிபரங்கள் அடிப்படையில் நாட்டிலேயே தமிழகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் அதிகமானவை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் விதிமுறைகளை மீறி கலப்படம் நிறைந்தவையாக காணப்படுகின்றன. இருப்பினும் இம்மாநிலங்களில் இத்தகைய கலப்படங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகக் குறைவே.

தமிழகத்தில் 1047 உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இவற்றில் 203 உணவுப் பொருட்களை தயாரித்த நிறுவனங்களின் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மத்தியப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கலப்பட உணவுகளின் எண்ணிக்கை 1,412. ஆனால், குற்றம் நிரூபிக்கப்பட்டவை வெறும் 418. மகாராஷ்டிராவில் 1,162 உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் மிக சொற்பமான அளவில் 75 உணவுப் பொருட்கள் மட்டுமே கலப்பட பொருட்கள் என குற்றம் நிரூபிக்கப்பட்டது. உ.பி.யிலும் இதே நிலைதான். கலப்பட்ட பொருட்கள் எண்ணிக்கை 1,233, குற்றம் நிரூபிக்கப்பட்டவை வெறும் 83.

இப்படி சந்தையில் உலாவும் பல்வேறு கலப்பட, போலி உணவுகள் கண்டறியப்பட்டாலும் குற்றம் நிரூபிக்கப்படாமல் இருக்கும் அவலம் நீடிக்கிறது.

ஆனால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 ஆனது, உணவுப் பொருட்களில் பிராண்ட் பெயரை போலியாக பயன்படுத்துவது முதல் அனைத்து வகையான குற்றமும் கடும் தண்டனைக்குரியது எனத் தெரிவிக்கிறது. பலன் என்ன?!

தகவல் பற்றாக்குறை

ஒவ்வொரு மாநிலத்திலும் விற்பனையாகும் உணவுப் பொருட்களின் தரம் குறித்த புள்ளி விபரம் பற்றாக்குறையாகவே உள்ளது. மேற்குவங்கத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. டெல்லியில் 2014-15 காலகட்டத்தில் 148 பொருட்கள் விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்டது. ஆனால் அவற்றில் எத்தனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன என்பது குறித்த தகவல் இல்லை.

இந்த நிலை குறித்து விளக்கம் கேட்பதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் தொடர் தோல்வியே.

உரிய அமைப்புகளால் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் நாம் அனைவரும் அறிந்தும் அறியாமலும் கலப்பட பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: பாரதி ஆனந்த்

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *