Ambedkarஇந்திய அரசியல் சாசனத்தை மக்களுக்காக முன்மொழியும்போது மிக முக்கியமான ஒரு கேள்வியை டாக்டர் அம்பேத்கர் எழுப்பினார்: “அரசியலைப் பொறுத்தவரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம். அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதார வாழ்வில் ‘ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தைப் புறக்கணிப்பதைத் தொடரப்போகிறோம்.

இப்படிப்பட்ட முரண்பாடுகளின் வாழ்க்கையை இன்னும் எவ்வளவு காலம்தான் நாம் தொடரப்போகிறோம்?” அன்றைக்கு, அதாவது 65 ஆண்டுகளுக்கு முன்னால், அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கேள்வியாக இன்றும் நிற்கிறது.

இந்தியாவில் சமூக ஜனநாயகம் கிடைக்காமல் அரசியல் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்காது என்பதைத் தனது வாழ்க்கையின் செய்தியாக வெளிப்படுத்திய அவர், சாதியை அழித்தொழிப்பதை ஜனநாயகத்தின் அடிப்படைத் தேவையாகத் தனது கருத்துகளின் மூலம் வலியுறுத்தினார். அவரது கருத்துகள் தோற்றத்தில் தீவிரமானதாக இருந்தாலும், அவற்றின் உள்ளடக்கம் மனிதர்களின் மனதில் உள்ள அறத்தைத் தட்டி எழுப்பும் ஆழமான ஆன்மிக உணர்ச்சியைக் கொண்டிருப்பவை.

உண்மையில், சகோதரத்துவத்தால் பிணைக்கப்பட்ட ஒரு இந்திய சமூகத்தையே அவர் கனவு கண்டார். இந்த சகோதரத்துவத்தின் நீட்சியாகவே சமத்துவத்தையும் அம்பேத்கர் கண்டார். அதன் விளைவாகத்தான் இந்து மதச் சட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள அம்பேத்கர் முயற்சித்தார். அதன் மூலம் இந்து சமூகத்தில் பெண் களுக்குச் சம உரிமையை நிலைநாட்ட முயன்றார். எனினும் இந்து அமைப்புகள், இந்துத்துவவாதிகளின் எதிர்ப்பால் அந்தச் சட்டத்தைக் கொண்டுவர முடியாமல் போனது.

அம்பேத்கருக்கு நேரு எவ்வளவோ உறுதுணையாக இருந்தும் கடைசியில் நேருவாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட கோபத்தில் அம்பேத்கர் சட்டத் துறை அமைச்சர் பொறுப்பையே ராஜிநாமா செய்தார் என்றால், ஒடுக்கப்பட்ட இன மக்களைப் போலவே இந்து மதப் பெண்களின் உரிமைக்கும் அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது புலனாகும்.

நல்லவேளை, அம்பேத்கர் உருவாக்கிய இந்து மதச் சீர்திருத்தச் சட்டத்தின் பெரும் பகுதியை அவரது வாழ்நாளுக்குள்ளாகவே கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி அம்பேத்கரின் கனவை நனவாக்கினார் நேரு. அம்பேத்கர்தான் அந்தச் சீர்திருத்தத்தின் தலைமகன் என்பதையும் நேரு மறக்காமல் குறிப்பிட்டார்.

தன் வாழ்நாள் முழுவதும் இந்து மதத்தை எதிர்த்த அம்பேத்கர் அதன் சீர்திருத்தங்களில் பெருமளவு பங்காற்றினார் என்பதுதான் அவர் மகத்தான ஜனநாயகவாதி என்பதன் அடையாளம்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் அவர். வாழ்நாளுக்குப் பிறகும், ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாள மாக மாறி, இன்னும் போராட்டம் நிகழ்த்திக்கொண்டிருப்பவர் அம்பேத்கர். இதனால்தான், அந்த மக்களின் ஈடிணையற்ற தலைவராக அவர் இருக்கிறார். அதே காரணத்துக்காகத்தான் அவர் எல்லோருக்குமான தலைவராகிறார். கருப்பின மக்களுக்காகப் போராடினாலும் நெல்சன் மண்டேலாவை எல்லா மக்களும் தங்களுக்கான தலைவராக ஏற்றுக்கொள்வது எதனால்? சமூகத்தின் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கும் சமத்துவத்தை நிறுவுவதற்கும் எந்த மனிதர் பாடுபடுகிறாரோ அந்த மனிதரே உலகம் முழுமைக்குமான தலைவராகிறார்.

ஏனெனில், சமூகநீதியின் திசை நோக்கி ஒரு சமூகத்தை அவர் விழிக்க வைப்பதே அந்தச் சமூகத்தைப் பல மடங்கு மேம்படுத்துகிறது. சமத்துவத்தையும் சமூகநீதியையும் நோக்கி நம் சமூகம் சில அடிகளையாவது எடுத்துவைத்திருக்கிறது என்றால், அதற்கு அம்பேத்கரும் முக்கியமான காரணமல்லவா! இதற்காகவே, அம்பேத்கருக்கு நாம் காலமெல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

அம்பேத்கர் நம் எல்லோருக்குமான தலைவர். நாம் அனைவரும் இதை உணரும் காலத்தில்தான் சமூகநீதியின் உச்சத்தில் நாம் இருப்போம்!

– தி இந்து

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *