indian-law

நம் நீதியமைப்பு முறை யாருக்குச் சாதகமானது, யாருக்கு எதிரானது என்பதற்கான உதாரணங்கள்தான் சல்மான் கான் வழக்கும், விசாரணைக் கைதிகளாக 2,78,000 பேர் சிறையில் வாடுவதும்.

வழக்கு விசாரணை முடியாததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி 2 ஆண்டுகளும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 8 மாதங்களும் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டவர்களைவிட விசாரணைக்காகக் காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம். மொத்தக் கைதிகளில் அவர்களுடைய எண்ணிக்கை மட்டும் மூன்றில் இரண்டு பங்கு. இவர்கள் சிறையில் இருப்பதற்கு அவர்கள்மீது சாட்டப்பட்ட குற்றத்தைவிட முக்கியமான காரணம் வறுமைதான். ஜாமீன் தொகையைக்கூடச் செலுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர்.

“இது சட்டத்தின் ஆன்மாவுக்கே முரணானது. ஏழை என்பதற்காக ஒருவரைத் தேவையின்றி சிறையில் வாடவிடக் கூடாது. பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தொகையைவிடக் குறைவாகச் செலுத்தி ஜாமீ்ன் பெறலாம். ஆனால், அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்யவில்லை. நீதித் துறை, காவல் துறை, தேசிய சட்ட சேவைகள் ஆணையம், மாநில சட்ட சேவைகள் ஆணையம் போன்றவை இதில் உதவ வேண்டும்” என்று நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.

சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதைத் தடுப்பதற்காகவே குற்றவியல் நடைமுறைச் சட்டம் 2005-ல் திருத்தப்பட்டு பிரிவு 436(A) சேர்க்கப்பட்டது. ஒரு குற்றவாளி அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அதிகபட்சம் எவ்வளவு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்படுமோ அதில் பாதிக் காலத்தை விசாரணைக் கைதியாகவே கழித்திருந்தால், சொந்த உத்தரவாதத்தின் பேரிலேயே அவரை விடுதலை செய்துவிடலாம் என்று இந்தத் திருத்தம் தெரிவிக்கிறது.

இந்தக் கைதிகளெல்லாம் ஏழைகளாக இருப்பதாலும், சட்ட நடைமுறைகள் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததாலும் சட்டம் அவர்களுக்கு எதிராகவே திரும்புவதை நாம் இனியும் அனுமதிக்கக் கூடாது. சட்ட சேவைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் சிறைக்கூடங் களுக்குச் சென்று கைதிகளுக்குள்ள சட்டப்பூர்வ உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, ஜாமீன் பெறுவதற்குள்ள உரிமைகளைத் தெரிவிக்க வேண்டும்.

நீதி மறுக்கப்படுவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இவ்வளவு விசாரணைக் கைதிகளை வைத்திருப்பது இட வசதி, உணவு, மருத்துவ சிகிச்சை, பாதுகாப்பு ஆகிய வகைகளில் அரசுக்குப் பெரும் சுமையும்கூட. எனினும், உண்மையான தீர்வு என்பது விசாரணைக் கைதிகளை விடுதலை செய்வதில் மட்டும் இல்லை, வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதிலும்தான் இருக்க முடியும். ஏனெனில், சட்டப்படி தண்டிக்கப்பட்டால் சிறையில் இருக்கும் காலத்தைவிட விசாரணைக் கைதியாகவே அதிக நாள்களைக் கழிக்க வேண்டியிருப்பது சுடும் உண்மை. செல்வாக்கு மிக்கவர்கள் வழக்குகளில் நீதித் துறை காட்டும் வேகம் சாமானியர்கள் விஷயத்தில் ஏன் காணாமல் போய்விடுகிறது? இந்த 2,78,000 பேரும் இந்திய நீதித் துறைக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்துக்கும் ஒரு சவால். ஆம், அவர்கள் நம் மனசாட்சியுடன் வழக்காடுகிறார்கள்.

– தி இந்து

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *