12 தங்கக் கட்டிகளை விழுங்கியிருந்த வணிகருக்கு அறுவை சிகிச்சை

gold_bars

 

இந்தியத் தலைநகர் டில்லியில், 12 தங்கக் கட்டிகளை விழுங்கியிருந்த வர்த்தகர் ஒருவரின் வயிற்றிலிருந்து அந்தக் கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

தொடர்ந்து வாந்தி வருகிறது , மலம் கழிக்க முடியவில்லை என்று கூறிய இந்த 63 வயது வர்த்தகர் டில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மனைவியுடன் சண்டை போட்டபின்னர், கோபத்தில் ஒரு பாட்டில் மூடியை விழுங்கிவிட்டதாகக் கூறிக்கொண்ட அவர் உடலில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களால் தம் கண்களையே நம்பமுடியவில்லை.

ஆம், பாட்டில் மூடிக்குப்பதிலாக, அவரது வயிற்றில் சுமார் 400 கிராம் எடையுள்ள ( 50 பவுன்) தங்கக் கட்டிகள் இருந்தன என்று டாக்டர்கள் கூறினர்.

கட்டிகள் பறிமுதல்

ஏப்ரல் 9ம் தேதி இந்த அறுவை சிகிச்சை நடந்த பின்னர் ,இந்தத் ‘தங்க விழுங்கி’யை, போலிசாரும் சுங்க இலாகா அதிகாரிகளும் விசாரித்தனர். அந்தத் தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது போன்ற ஒரு சம்பவத்தை என்னுடைய தொழில் வாழ்க்கையில் கண்டதேயில்லை என்று மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.

“ஒரு முறை ஒரு கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் ஒன்றை ஒரு நோயாளியின் சிறுநீரகப் பையில் இருந்து எடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு நோயாளியின் வயிற்றிலிருந்து தங்கத்தை எடுப்பது இதுதான் எனக்கு முதல் முறை. ஒரு நோயாளியின் வயிற்றிலிருந்து தங்கத்தை எடுப்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்றார் டாக்டர் ராமச்சந்திரன்.

” மூன்று மணிநேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை எனக்கு மிகவும் களைப்பைத் தந்தது. அவர் ஒரு மிகவும் வயதான நோயாளி என்பதால் நாங்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டியிருந்தது” என்றார் ராமச்சந்திரன்.

“ஏற்கனவே இந்த வர்த்தகருக்கு நான்கு முறை வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அவர் ஒரு நீரிழிவு நோயாளியும் கூட. அவரது குடல் பகுதியில் தடை இருப்பதாகத் தெரிந்த அறிகுறிகளுக்காக, அவர் இந்த மாதம் முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்”, என்று ராமச்சந்திரன் மேலும் கூறினார்.

இந்தியாவின் தங்கத் தாகம்

இந்தியர்களின் தங்க மோகம்

உலகில் தங்க இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில், தற்போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சரிக்கட்ட, இந்திய அரசு, தங்க இறக்குமதிக்கு சமீபத்தில் இறக்குமதித் தீர்வையை உயர்த்தியிருந்தது.

ஆனால் இந்த தீர்வை உயர்வை அடுத்து, இந்தியாவுக்குத் தங்கக் கடத்தல் சம்பவங்கள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்தன.

இந்தியாவால்,கடந்த ஆண்டு மே மாதம் 1.62 லட்சம் கிலோ என்ற அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்க இறக்குமதி மீதான சுங்கத் தீர்வை மூன்று முறை உயர்த்தப்பட்டதை அடுத்து, இந்த இறக்குமதி, 19,300 கிலோ என்ற அளவுக்கு கடந்த நவம்பரில் வீழ்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP