KAMARAJ

 

இன்னைக்கு பள்ளிக்கூடத்தில் சத்துணவு போடுறாங்க இல்லையா? அப்படிப் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு போடுறதுக்கு வித்திட்டது யார் தெரியுமா? காமராஜர். இவர் தமிழக முதல்வராக இருந்தப்பதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாரு. ஏழையாக இருந்த சின்னப் பசங்க எல்லாம் படிப்பதற்குப் பதிலா குடும்பக் கஷ்டம் காரணமாக வேலைக்குப் போனாங்க. அப்படிச் சின்னப் பசங்க வேலைக்குப் போகாம இருக்குறதுக்காக இந்தத் திட்டத்தை 1955-ம் வருஷத்துல கொண்டு வந்தாரு. இந்தத் திட்டத்தைக் கொண்டுவரச் சின்ன வயசில நடந்த ஒரு சம்பவம்கூட காரணம்னு சொல்லலாம்.

விருதுநகர்ல இருக்குற ஒரு பள்ளிக்கூடத்துல காமராஜர் 4-ம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தாரு. அந்தப் பள்ளிக்கூடம் அவரோட வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்துச்சி. அதனால மத்தியானத்துல சாப்பிடக் காமராஜர் வீட்டுக்கு வந்துடுவார். வழக்கமா இப்படித்தான் நடந்துக்கிட்டு இருந்துச்சி. காமராஜர் வீட்டுல அவரோட பாட்டியும் இருந்தாங்க. பாட்டின்னா அவருக்கு ரொம்ப பிரியம். ஒரு நாள் பாட்டியிடம் போன காமராஜர், “இனிமே சாப்பிடுறதுக்கு மத்தியானம் வீட்டுக்கு வர மாட்டேன். எனக்குச் சாப்பாட்டைக் கட்டிக் கொடுத்துடுங்க. நான் பள்ளிக்கூடத்துலேயே சாப்பிட்டுக்கிறேன்” என்று சொன்னார்.

“பள்ளிக்கூடம் பக்கத்துல வீடு இருக்கிறதால, அப்படித் தர முடியாது, வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ”ன்னு பாட்டி கண்டிப்பா சொல்லிட்டாங்க. ஆனாலும் காமராஜர் விடுவதா இல்லை. அழுது அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டாரு. பாட்டிக்கு இன்னும் கோபம் அதிகமாயிடுச்சி. கோபத்துல காமராஜரை அடித்தும்விட்டார். அடிவாங்கினாலும்கூடக் காமராஜரோட பிடிவாதம் குறையவே இல்லை.

காமராஜரோட பிடிவாதத்தைப் பார்த்துப் பாட்டி மனமிரங்கினாங்க. தினமும் மதியச் சாப்பாட்டை டிபன் பாக்ஸில் கட்டிக் கொடுக்க ஆரம்பித்தார். இப்படியே நாட்கள் போயின. ஒரு நாள் மதியம் பாட்டி பள்ளிக்கூடத்துக்கு போனாங்க. தன்னோட பேரன் மதியச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுறான்னு ஒரு இடத்துல மறைவாக நின்னுக்கிட்டு பார்த்தாங்க.

மதிய உணவு பெல் அடிச்சவுடனேயே டிபன் பாக்ஸோடு காமராஜர் மரத்தடிக்கு வந்தாரு. அங்க கிழிந்த அழுக்குச் சட்டையுடன் ஒரு ஏழைச் சிறுவனும் வந்தான். கட்டிக்கொண்டு வந்த மதியச் சாப்பாட்டை அந்தச் சிறுவனோடு பகிர்ந்து சாப்பிட்டார் காமராஜர். இதைக் கண்டதும் பாட்டிக்கு மனம் நெகிழ்ந்துபோச்சி. இதுக்காகத்தான் பேரன் சாப்பாட்டைக் கட்டிக் கொடுக்கச் சொன்னானா, இது தெரியாம அடித்துவிட்டோமே என்று பாட்டிக்குக் கவலையாகப் போய்விட்டது.

காமராஜரோடு சாப்பாட்டைப் பகிர்ந்துகொண்ட அந்தச் சிறுவன் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். தினமும் மதியானம் சாப்பிட அவனிடம் சாப்பாடு இருக்காது. பள்ளிக்கூடக் குழாயில வர்ற தண்ணீரைக் குடிச்சிட்டு பசியைத் தீர்த்துக்கொள்வான். அதைப் பார்த்துச் சின்ன வயதிலேயே காமராஜர் மனம் வருந்தினார். அவனுக்காகத்தான் வீட்டிலிருந்து அழுது, அடம்பிடிச்சி சாப்பாடு கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

பின்னாளில் தமிழக முதலமைச்சரானபோது மதிய உணவுத் திட்டத்தை அவர் கொண்டுவந்தார். அந்தத் திட்டம் கொண்டுவர, சிறு வயதில் காமராஜருக்கு நடந்த இந்தச் சம்பவமும் ஒரு காரணமாக இருந்தது என்பதை உங்களுக்குச் சொல்லவும் வேண்டுமா என்ன?

தொகுப்பு: மிது

– தி இந்து

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *