national-intelligence-agency

national-intelligence-agencyதேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிக அதிகாரங்களைப் பெறும் வகையிலான மசோதாவை பாஜக அரசு வெற்றிகரமாக நாடாளுமன்றத்திலும் இரு அவைகளிலும் நிறைவேற்றிவிட்டாலும், இத்தகைய சட்டங்கள் மீதான விவாதம் மிகுந்த அவசியமாகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக இச்சட்டத்துக்கான நியாயம் கூறப்பட்டாலும், அடிப்படையில், இரு அம்சங்கள் கேள்விக்குள்ளாகின்றன. ஒன்று, மாநிலங்களின் உரிமை; மற்றொன்று, தனிமனித உரிமை. ஒருவரைப் பயங்கரவாதி என்று கருதி, தேசியப் புலனாய்வு முகமை கைதுசெய்ய அந்த மாநிலத்தின் காவல் துறைத் தலைவரின் அனுமதிகூட இனி தேவையில்லை. அப்படிக் கைதுசெய்யப்படும் ஒருவர், அவர் மீது ஏற்கெனவே வழக்குகள் ஏதும் இருப்பின் அவையும் தேசியப் புலனாய்வு முகமை முன்வைக்கும் புதிய வழக்கோடு இணைக்கப்பட்டு விசாரணை முடியும் வரை அவரைச் சிறையிலேயே வைக்க முடியும் என்பதான ஒரு ஏற்பாடு இந்தச் சட்டத்தின் பின்னுள்ள அபாயத்தை விளக்கிவிடும்.

ஆளுங்கட்சியை விமர்சிப்பதற்கு எவ்வளவு இருக்கிறதோ அதற்கு இணையாக எதிர்க்கட்சிகளை விமர்சிக்கவும் இந்த விவகாரத்தில் இடமிருக்கிறது. பெரும்பாலான கட்சிகளின் ஆதரவோடு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது; மக்களவையில் எதிர்த்து வாக்களித்தவர்கள் வெறும் 6 பேர்; மாநிலங்களவையில் அதுவும் இல்லை. இந்தியாவின் பெரும்பான்மைக் கட்சிகள் அரசியத்தின் (ஸ்டேட்டிஸம்) பார்வை மேலோங்கியவையாக ஆகிக்கொண்டிருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. மக்களுடைய சிவில் உரிமைகளில் தலையிடும் சில அம்சங்களை காங்கிரஸ் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர் என்றாலும், கட்சி என்ற அளவில் காங்கிரஸ் இதை ஆதரித்தது ஓர் உதாரணம். தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலரைப் பழிவாங்கவும் அலைக்கழிக்கவும் இதற்கு முன்னால் கொண்டுவரப்பட்ட ‘பொடா’, ‘தடா’ ஆகிய சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதை இரு அவையிலும் எந்த உறுப்பினரும் நினைவுகூர்ந்து பேசவில்லை!

நியாயமான நடைமுறைகளிலிருந்தும் அரசியல் சட்ட லட்சியங்களிலிருந்தும் ‘பொடா’, ‘தடா’ ஆகியவை விலகியே இருந்ததால், அவற்றைக் கைவிட நேர்ந்தது என்பது வரலாறு. 1985 முதல் 1994 வரையில் ‘தடா’ சட்டப்படி 76,166 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் வெறும் 4% பேர் மட்டுமே அச்சட்டப்படி குற்றமிழைத்திருப்பதாகத் தண்டிக்கப்பட்டனர் என்ற ஒரு வரித் தகவல் நம் கடந்த காலத்தைச் சொல்லிவிடும். அடுத்தது ‘பொடா’. அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த பாஜக இதற்கெதிராகப் பேசியது. பிற்பாடு, கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்துக்காக ‘பொடா’ சட்டத்தை ரத்துசெய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,, 2004-ல் ‘சட்டவிரோதச் செயல்கள் தடுப்பு (திருத்த) மசோதா’வைக் கொண்டுவந்து, முந்தைய சட்டங்களின் பல பிரிவுகளை அதன் வழி மீண்டும் சுவீகரித்தது. ஆக, ஒரு நெடிய வரலாற்றின் தொடர்ச்சியாகவே இச்சட்டத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஜனநாயகத்துக்கு இது நல்லதல்ல.

 

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *