கடந்த 11 ஆண்டுகளில், பா.ஜனதா கட்சியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. கட்சிகளின் சொத்து மதிப்பில்  பா.ஜனதா முதலிடத்தில் இருக்கிறது

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், தங்கள் சொத்து மதிப்பை அவ்வப்போது தேர்தல் கமி‌ஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, பா.ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 7 தேசிய கட்சிகள் தேர்தல் கமி‌ஷனில் தாக்கல் செய்த சொத்து பட்டியலில் உள்ள விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய தொண்டு நிறுவனங்கள் தொகுத்துள்ளன.

கடந்த 2004–2005–ம் நிதி ஆண்டில் இருந்து 2015–2016–ம் நிதி ஆண்டுவரையிலான 11 ஆண்டு கால சொத்து விவரங்களை மேற்கண்ட தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேற்று கொல்கத்தாவில் வெளியிட்டனர்.

இந்த விவரங்களின்படி, சொத்து மதிப்பில் பா.ஜனதா முதலிடத்தில் உள்ளது. 2004–2005–ம் நிதி ஆண்டில் பா.ஜனதாவின் சொத்து மதிப்பு ரூ.122 கோடியே 93 லட்சமாக இருந்தது. அது, 2015–2016–ம் நிதி ஆண்டில் ரூ.893 கோடியே 88 லட்சமாக உயர்ந்துள்ளது.

காங்கிரசின் சொத்து மதிப்பு ரூ.167 கோடியே 35 லட்சத்தில் இருந்து ரூ.758 கோடியே 79 லட்சமாக உயர்ந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.43 கோடியே 9 லட்சத்தில் இருந்து ரூ.559 கோடியாக உயர்ந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சொத்து மதிப்பு ரூ.90 கோடியே 55 லட்சத்தில் இருந்து ரூ.437 கோடியே 78 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, 383 சதவீத உயர்வாகும். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சொத்து மதிப்பு ரூ.5 கோடியே 56 லட்சத்தில் இருந்து ரூ.10 கோடியே 18 லட்சமாக அதிகரித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரசின் சொத்து மதிப்பு வெறும் 25 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.44 கோடியே 99 லட்சமாக அதிகரித்துள்ளது.

தேசியவாத காங்கிரசின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 60 லட்சத்தில் இருந்து ரூ.14 கோடியே 54 லட்சமாக உயர்ந்துள்ளது.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *