மத அடையாளத்தை துறப்பதே பாஜகவின் மிகப்பெரிய சவால்: அமர்த்தியா சென்

Amartya Sen

நரேந்திர மோடி பிரதமராவது தனக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும். மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என ஒரு சிலர் கூறுவதிலும் தனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமரத்தியா சென்.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில்: “அரசாங்கத்தை பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்பது கேலிக்கூத்தானது. அரசாங்கத்தை பிடிக்கவில்லை என்றால் அதைத்தான் மாற்ற வேண்டும்.

மோடி பிரதமராவதில் எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான இந்தியர்களுக்கு உடன்பாடு இல்லை. ராமர் கோயில் கட்டுவதை பாஜக முன்னிலைப்படுத்தாதது நல்லது. ஆனால் இதை மட்டுமே வைத்துக் கொண்டு இந்து – முஸ்லீம் பிரிவினையை தனது எண்ண ஓட்டத்தின் ஒரு பகுதியாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு நபர் நிஜத்தில் அத்தகைய எண்ணங்களை கட்டுப்படுத்தி செயல்படுவார் என்ற முடிவுக்கு வரலாமா? இந்த பிரச்சினையை சற்றே உற்று நோக்க வேண்டும்.

சர்ச்சைக்குரிய விவகாரங்களை கருத்தில் கொள்ளாமல் இருப்பது தேர்தல் ரீதியாக சரியான முடிவு. இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தால், தன் மீதான மத அடையாளத்தை நீக்குவதே பாஜகவின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்” என தெரிவித்தார்.

மோடி பிரதமர் பதவிக்கு தன்னை தகுதியானவராக்கிக் கொள்ளும் முயற்சி குறித்த கேள்விக்கு: “தேர்தலில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற மேற்கொள்ளும் முயற்சிகளையும் உண்மையான உந்துதலின் பேரில் மேற்கொள்ளும் முயற்சிகளையும் வேறுபடுத்துவது கடினம். வாக்குகளை பெற மோடி தன்னை தகுதிப்படுத்திக் கொள்வது வரவேற்கத்தக்கதே. இருப்பினும், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளும் போது மோடி பல்வேறு வாக்குறுதிகளை அளிக்க வேண்டியிருக்கும். நான் மோடி பிரதமராக வேண்டும் என ஆதங்கப்படவில்லை” என்றார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மிகப்பெரிய சாதனையாக இந்திய – அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தை மன்மோகன் சிங் கூறியுள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சென்: “மன்மோகன் சிங், ஐ.மு.கூட்டணியின் சாதனையாக இந்திய – அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தை தவறுதலாக குறிப்பிட்டுள்ளார். இது மிகச்சிறிய சாதனையே.

போலியோ நோயை கட்டுப்படுத்தியதும், எய்ட்ஸ் நோய் பரவுதலை தடுத்ததுமே ஐ.மு. கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனையாகும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் 5 ஆண்டுகால ஆட்சியில் நாடு இதுவரை கண்டிராத வளர்ச்சியை எட்டியது. இப்போதும்கூட வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டிருந்தாலும் அது மற்ற உலக நாடுகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எதையுமே சாதிக்கவில்லை என கூறுவது மிகவும் அபத்தமானது. உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் காங்கிரஸ் அரசு சரியான பாதையில் சென்றிருந்தது. இன்னும் பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியிருக்கலாம்.

மானியங்களை பொருத்தவரை மிகவும் அத்தியாவசியமான மானியங்களை மட்டும் நடைமுறையில் வைத்துக் கொள்ளப்போவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சென்: மானியங்கள் சிலவற்றை ரத்து செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு முன்னதாக மானியங்கள் எங்கு செல்கின்றன என்ற புரிதல் ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் 1%-க்கும் குறைவாகவே உணவுப் பாதுகாப்புக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் செலவிடப்படுகிறது. ஆனால் மின்சாரம், சமையல் எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள், சொகுசுக் கார்களுக்கான டீசல் போன்றவற்றிக்கு அளிக்கப்படும் மானியத்திற்கு இருமடங்கு அதிகமாக செலவழிக்கப்படுகிறது.

5 நட்சத்திர ஓட்டல்களில் உள்ள குளிர்சாதன வசதிக்குக்கூட மானியங்கள் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், ஏழை மக்களுக்கான மானியங்களில் ஏதாவது மாற்றம் செய்தால் மட்டுமே நிதிக் கொள்கையை கையாள்வதில் பொறுப்பற்றத் தன்மை இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். நடுத்தர மக்கள், பணக்காரர்கள் ஆதாயம் அடையும் மானியங்களை திருத்தும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP