அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது என்று மனநிறைவுகொள்ள முடியாத வகையில் வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது பொன்பரப்பியில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் தாக்குதல்கள். அடுத்து, பொன்னமராவதியில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்ட உரையாடல் பதிவானது சமூக ஊடகங்கள் வழியே மக்கள் இடையே பரப்பப்பட்டது ஒரு மோசமான சூழலை உண்டாக்கியது. இரண்டுக்குப் பின்னாலும் இருப்பது அப்பட்டமான சாதிவெறி என்பது தமிழ்நாட்டுக்கு மேலும் இரு தலைகுனிவுகள்தான்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் அருவெறுக்கத்தக்க வகையில் பேசப்பட்ட குரல் பதிவுகள் ‘வாட்ஸ்அப்’ மூலம் பரப்பப்பட்டதன் விளைவாக, கொந்தளித்துப்போன அந்தச் சமூக மக்கள் வீதியில் இறங்கும் நிலை ஏற்பட்டது. உரையாடலில் வெளிப்பட்டது கீழ்மையான சாதிய வெறியும் வன்மமும்தான். தனி நபர்களின் இத்தகைய கீழ்மை எண்ணமும் சாதிய வெறியும் கூட்டு பலம் பெற்று, அரசியல் பின்னணியும் சேரும்போது என்னவாக மாறுகிறது என்பதே அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் நடந்த தலித்துகள் மீதான வன்முறை வெளிப்படுத்தியது.

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்குப் பானைச் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. பொன்பரப்பியில் நடந்த வன்முறையில் பானைச் சின்னம் வரையப்பட்டிருந்த வீடுகளே முதல் இலக்காகக் கொள்ளப்பட்டிருக்கின்றன; நூற்றுக்கும் மேற்பட்ட தலித் குடியிருப்புகள் நாசமாக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் காயமுற்றிருக்கின்றனர்.

முன்னெச்சரிக்கையற்ற சூழலில், தடுக்க யாருமற்ற தருணங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துவந்த இத்தகைய வன்முறைகளை நூற்றுக்கணக்கான போலீஸார் ஒரு தொகுதிக்குள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தேர்தல் நாளிலும்கூடச் சாதிய சக்திகளால் நடத்த முடியும் என்றால், ஒவ்வொரு நாளும் அவை எவ்வளவு பலம் பெற்றுவருகின்றன என்பதையே பொன்பரப்பி சம்பவம் காட்டுகிறது.

அரசியல்ரீதியான போட்டிகளைச் சமாளிக்க முடியாதவர்கள் அதை வன்முறையால் வெற்றிகொள்ள நினைப்பதும், இன்னமும்கூட இதையெல்லாம் தடுக்க முடியாத நிலையில்தான் நம்முடைய அமைப்பு இருப்பதும் எழுபதாண்டு இந்திய ஜனநாயகமும் இவ்வளவு பெரிய அரசும் சாதி முன் பம்மும் இடத்தில்தான் இருக்கின்றன என்பதைத் தாண்டி நமக்கு உணர்த்தும் செய்தி என்ன? வெட்கக்கேடு! வாக்களிப்பு நாளில் ஒரு முதியவரின் கை விரல் வெட்டப்பட்டதானது அப்பட்டமான குறியீடுதான் – சாதியின் முன் உங்கள் சக்தி என்ன என்று இந்திய அரசை நோக்கி எழுப்பும் கேள்விதான். அரசு என்ன செய்யப்போகிறது?

பொன்பரப்பியில் தாக்குதலில் ஈடுபட்ட சாதிவெறியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொன்னமராவதியில் பதற்றத்துக்குக் காரணமாகப் பேசியவர்கள் யார், அதைப் பரப்பியவர்கள் யார் என்பது பற்றிய விசாரணைகள்தான் அவர்களின் உள்நோக்கம் குறித்த முழு உண்மைகளை வெளிக்கொண்டுவரும். எப்படி இருப்பினும் இதன் பின்னே ஒளிந்திருக்கும் வக்கிரம், மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. நம்மை நாம் ஆழமான சுயபரிசீலனைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும்!

பொன்பரப்பி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி விசிகவினர் ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பொன்பரப்பி கிராமத்தில் நேற்று காலை வாக்குப் பதிவு நடைபெற்ற போது, பாமக மற்றும் விசிக ஆகிய இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 20 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொன்பரப்பியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 25க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவ்வழக்கில் யாரும் கைது செய்யப்படாததைக் கண்டித்து விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பொன்பரப்பி சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 400க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரியலூர்- ஜெயங்கொண்டம் மற்றும் சிதம்பரம் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, வன்முறையைப் பயன்படுத்தி அதிமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் கள்ள ஓட்டுகளைப் பதிவு செய்துள்ளனர் என்று குற்றம்சாட்டிய அக்கட்சித் தலைவர் திருமாவளவன் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த ஆட்சியரிடம் மனு கொடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 19) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தமிழகத்தில் நடைபெற்ற 18 தொகுதி சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும். தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் வன்முறையைத் தூண்டிவிட்டனர். நடந்து முடிந்த தேர்தலில் வடமாநிலங்களில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

ஏப்ரல் 18ஆம் தேதி பொன்பரப்பியில் காலை 10 மணிக்குத் தலித் மக்களை வாக்களிக்காமல் தடுத்துள்ளனர். இந்த வன்முறையால் குடிசை வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். விழுப்புரம், தருமபுரி போன்ற இடங்களிலும் வன்முறையை நடத்தியுள்ளனர்.

அரசியல் ஆதாயம் தேட அதிமுக மற்றும் பாஜக, பாமக இந்த வன்முறையை நிகழ்த்தியிருக்கிறது. வன்முறையைப் பயன்படுத்தி அரியலூரில் 2000 வாக்குகள் கள்ள ஓட்டுகளாகப் போடப்பட்டுள்ளது. பொன்பரப்பியில் நடந்த சம்பவம் குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். இதுகுறித்து சிதம்பரம் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பாஜக போன்ற மதவெறிக் கட்சிகளும், பாமக போன்ற சாதியக் கட்சிகளும் இருந்தால் சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமை ஏற்படாது என்றும் கூறியுள்ளார் திருமாவளவன்.

tamil.thehindu.com

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *