இந்திய விமானப் படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானன், பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டிருப்பது இந்தியா முழுமைக்கும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தை விதைத்திருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி நிலவவும் நல்லெண்ணத்தின் அடையாளமாகவும் அபிநந்தனை விடுதலை செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். உண்மையில், சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்தே இம்முடிவை பாகிஸ்தான் எடுத்திருக்கிறது. எனினும், பாகிஸ்தானின் இந்த சமிக்ஞையை ஏற்று சமரச நடவடிக்கைகளுக்கு இந்தியா தயாராக வேண்டும்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகம்மது முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தின.

இந்திய வான் எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப் படை விமானங்களும் புகுந்தன. அவ்விமானங்களை விரட்டிச் சென்ற இந்தியப் போர் விமானங்களில், அபிநந்தன் ஓட்டிச் சென்ற விமானம் தாக்குதலுக்குள்ளானது. பாராசூட் மூலம் விமானத்திலிருந்து குதித்த அபிநந்தன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி, போர்க் கைதியானார்.

இதற்கிடையே, மத்திய அரசைச் சேர்ந்த சிலரும், சில பாஜக தலைவர்களும் தெரிவித்த காட்டமான கருத்துகளும், இரு நாடுகளின் ஊடகங்களும் வெறியூட்டும் வகையில் நடத்திய விவாதங்களும், போர்ப் பதற்றத்தை உருவாக்கின. போர் ஆதரவு முழக்கங்கள் பெரிய அளவில் எழுந்தன. இந்தியப் பகுதிகள் மீது பாகிஸ்தான்ராணுவத்தினர் பீரங்கிகளால் சுட்டதுடன், இந்திய ராணுவ நிலைகளைத் தாக்கவும் முற்பட்டது மேலும் பதற்றத்தை அதிகரித்தது. அணுகுண்டுகளைத் தயாரித்து கையிருப்பில் வைத்திருக்கும் இரு நாடுகளும் போரில் இறங்கத் தயாரானது உலக அரங்கிலும் பதற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருந்தன. இந்தச் சூழலில், அபிநந்தன் விடுதலை பதற்றத்தைப் பெருமளவில் தணித்திருக்கிறது. இந்தச் சூழலை இரு நாடுகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தி ஹிந்து

 

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *