ஜெருசலேம் நகரம் தொடர்பான இறுதித் தீர்வை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பேச்சுவார்த்தைகள் மூலம்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஐநா பொதுச் சபை கூட்டத்தில் இயற்றப்பட்டிருக்கும் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு எதிரான வாக்கெடுப்பாகவும் இந்தத் தீர்மானம் அமைந்துவிட்டது. இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருப்பதன் மூலம், தனது நீண்டகாலக் கொள்கையில் மாற்றம் இல்லை என்பதைக் காட்டியிருக்கிறது இந்தியா.

அமெரிக்காவின் முடிவை ஆதரிக்காத நாடுகள் அதற்குரிய பலனை அனுபவித்தாக வேண்டும் என்றும், உதவிகள் நிறுத்தப்படும் என்றும் அதிபர் ட்ரம்பும் ஐநா சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலியும் எச்சரித்திருந்தனர். எனினும், 128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருக்கின்றன. அமெரிக்காவின் முடிவு ஆழ்ந்த வருத்தத்தை அளிப்பதாக அதன் ‘நேட்டோ’ தோழமை நாடுகளான ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவையும் ஆசிய தோழமை நாடுகளான ஜப்பான், தென் கொரியாவும் கருத்து தெரிவித்துள்ளன. இது அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அதிருப்தியடையச் செய்திருக்கிறது.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்த நாடுகளை, ‘பொய்களின் கூடாரம்’ என்று வர்ணித்திருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. ‘128 நாடுகளும் கயிற்றால் பிணைக்கப்பட்ட பொம்மைகள்’ என்று கோபம் காட்டியிருக்கிறார் ஐநா சபைக்கான இஸ்ரேலியப் பிரதிநிதி. மிகவும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் இவை. சர்வதேசச் சட்டங்களையும் விதிகளையும் அமெரிக்கா மதித்து நடக்கும் என்று ட்ரம்ப் மிகச் சமீபத்தில்தான் கூறியிருந்தார். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சமாதானப் பேச்சில் ஈடுபட வேண்டும் என்ற தங்களுடைய உறுதியிலிருந்து அமெரிக்கா அவ்வளவு எளிதில் பின்வாங்கிவிட முடியாது; ஜெருசலேம் நகரம் தொடர்பாக இத்தனை ஆண்டுகளாக சர்வதேச அரங்கில் எடுத்த நிலைக்கு மாறாக, புதிய நிலையை எடுத்துவிட முடியாது. அப்படிச் செய்தால் அமெரிக்கா பேசுவது ஒன்று, செய்வது ஒன்று என்று ஆகிவிடும்.

இஸ்ரேல், பாலஸ்தீனம் சமாதான முயற்சி, ஜெருசலேம் விவகாரம் ஆகியவற்றில் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டும் எனும் பாரம்பரியக் கொள்கைக்கேற்பவே இந்தியா வாக்களித்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீனம் தொடர்பான எதையும் பேசுவதைத் தவிர்த்தார். பாலஸ்தீன நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் 181-வது எண் தீர்மானம் (1948) நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை ஐநா சபைக்கான அறிக்கையில் பிறகு வலியுறுத்தினார். அதற்குச் சில நாட்கள் கழித்துத்தான், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவை ஆதரிக்காத நாடுகளுக்கு ஐநாவில் ஆதரவு தரமாட்டோம் என்று ட்ரம்ப் எச்சரிக்கிறார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஜனவரி மாதம் இந்தியா வரவிருக்கிறார். இவற்றின் பின்னணியில் பாலஸ்தீனத்துக்கான தனது ஆதரவு நிலைப்பாட்டைத் தொடருமா எனும் அச்சம் சில வட்டாரங்களில் எழுந்தது. இந்தச் சூழலில், இந்தியா தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்ளாமல் இருப்பது வரவேற்கத் தக்கது!

-தி இந்து 

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *