karnataka government

karnataka governmentகர்நாடகத்தில் பல வார இழுபறி, அரசியல் அவலங்களுக்குப் பிறகு காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணியாட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அரசு நிர்வாகத்தை முடக்கிவிட்டிருந்தது. சட்டமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சியான பாஜக விலைக்கு வாங்கியதாகவும் அவர்களைக் கடத்திவைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கூட்டணி அரசு தன்னால் முடிந்தவரை தங்கள் அரசைத் தக்கவைக்கப் போராடினாலும் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை; நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து ஹெச்.டி.குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை வெல்லாவிடினும் 105 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையைக் கொண்ட கட்சியாக இருந்த பாஜக ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத் தலையீட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு முன்னதாக நடத்தப்பட்டு, அதில் பாஜக தோல்வியடைந்ததை அடுத்து அந்த அரசு கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்துதான் தற்போது முடிவுக்கு வந்திருக்கும் குமாரசாமி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. கூட்டணி அரசில் கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் குழப்பத்தையும் பாதகத்தையும் ஏற்படுத்த பாஜக ஒருபோதும் தவறியதேயில்லை. இரண்டு தரப்புகளும் மாறி மாறி மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாலும் இது கொள்கை அடிப்படையிலான மோதலாக அல்லாமல் சந்தர்ப்பவாத மோதலாகவே இருந்தது.

இந்நிலையில், பாஜக தற்போது ஆட்சி அமைக்க முயன்றுகொண்டிருக்கிறது. ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோருவதை எந்தச் சட்டமும் தடுக்காது என்றாலும், பாஜக அப்படிச் செய்வதைத் தவிர்ப்பது அக்கட்சிக்கும் நல்லது; ஜனநாயகத்துக்கும் நல்லது. புதிதாகத் தேர்தல் நடந்தால் இன்றைய சூழலில் பெரும்பான்மை இடங்களை பாஜக வெல்வதற்கே வாய்ப்பிருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியை அமைத்தால் ஒரு ஸ்திரமான அரசாக அது செயலாற்ற முடியும். இல்லாவிடில், இதே ஆட்டங்கள் தொடரும். மேலும், ஆட்சியதிகாரத்தை எந்த வழியிலாவது கைப்பற்றுவதில் தனக்கு ஈடுபாடு இல்லை; நல்ல நிர்வாகத்தைக் கொண்ட அரசை அமைப்பதில் மட்டும்தான் தனக்கு அக்கறை என்று பாஜக நாட்டுக்குச் சொல்ல விரும்பினால், அதற்கு ஒரு வாய்ப்பாகவும் அதற்கு இது அமைந்திருக்கிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர் கலந்துகொள்ளவில்லை. இவர்களில் பலரும் ஏற்கெனவே ராஜிநாமா செய்தவர்கள். அவர்களின் ராஜிநாமாவை ஏற்பது குறித்த கேள்விகளும் அவர்களைத் தகுதிநீக்கம் செய்வது குறித்த கேள்விகளும் தற்போது அவைத் தலைவர் முன்பும் உச்ச நீதிமன்றத்தின் முன்பும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பலவும் முன்னுதாரணமற்ற, சிக்கலான கேள்விகள். ஆனால், அவை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். அதுவரை புதிய அரசு அமைவது என்பது விரும்பத்தகாத ஒன்றாகவே இருக்கும். தேர்தல்தான் அடுத்து முன் நிற்கும் ஒரே தீர்வாகத் தெரிகிறது. மக்கள் முடிவெடுக்கட்டும்!

 

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *