natural organic vegitation is possibleஇயற்கை அல்லது அங்கக வேளாண்மை உலகளவில் 30 மில்லியன் எக்டேரில் பயிரிடப்படுகிறது. இந்தியாவிற்கு கிடைத்திருப்பது 117 வது இடம்தான். ஆனால் அதிக வேளாண் பரப்பு கொண்டது இந்தியாவும், சீனாவும் தான்.

பேச்சுரிமை, எழுத்துரிமை அதிகமுள்ள ஜனநாயக நாட்டில் இப்படித்தான் பயிர் செய்ய வேண்டுமென யாரையும் கட்டுப்படுத்த முடியாது. இந்தியாவில் நாகாலாந்து, மிசோரமில் இயற்கை விவசாயம் சற்றே கூடுதலாக உள்ளது. அங்கே வித்தியாசமான பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியா அளவில் ஒப்பிடும் போது தமிழகத்தின் இயற்கை விவசாயம் 5 சதவீதம் தான்.

பளபளப்பு ஆரோக்கியமா :

பளபளப்பான கத்தரிக்காயும், அழகான தக்காளியும், கொய்யாவும் தான் ஆரோக்கியமானது என்று நினைக்கிறோம். இயற்கையாக விளைந்த கத்தரிக்காயில் பூச்சிதாக்குதல் இருக்கும். தக்காளி பளபளப்பாக இருக்காது. கொய்யா சொறி பிடித்தது போலிருக்கும். இயற்கையான காய்கறிகள் எங்கே கிடைக்கிறது என்பது தான் நுகர்வோரின் பிரச்னை.நஞ்சில்லா உணவை சாப்பிடுவதாக நம்மால் உறுதியளிக்க முடியுமா. தினமும் சாப்பிடும் இட்லி, தோசை, சாதம் அனைத்திலும் மில்லியனில் ஒருபங்கு அளவாவது விஷத்தையும் சேர்த்து உண்கிறோம். அதனால் தான் பலசரக்கு கடைகள் போல மருந்தகங்கள் பெருகிவிட்டன. கடுகு, வெந்தயம், சீரகம் என மாத பட்ஜெட் வாங்குவது போல மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் நிலையில் உள்ளோம். இது இன்னொரு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்தக்காலத்தில் 17 வயதில் ஏற்பட்ட உடலின் வளர்ச்சி தற்போது ஒன்பது வயதில் ஏற்படுகிறது.

திராட்சையை தொடாத தேனீக்கள் :

விதையில்லா திராட்சை வாங்குவதை பெருமையாக பேசுகிறோம். முன்பெல்லாம் கடைகளில் திராட்சை இருந்தால் கூடவே சின்னஞ்சிறு தேனீக்கள் சுற்றி வருவதை பார்த்திருப்போம். இப்போது எல்லாம் திராட்சையின் மேல் படிந்திருக்கும் நஞ்சைக் கண்டு ஈ கூட வருவதில்லை. நஞ்சின் காரணமாக, இந்திய திராட்சை, கொத்தமல்லி, கறிவேப்பிலையை ஏற்றுமதி செய்ய முடியவில்லை.இயற்கை முறையில் அமைந்த பூச்சிக்கொல்லி முறைகளை, சற்றே நினைவு கூர்ந்தால் தாங்கள் கைகழுவிய செல்வம் என்னவென்று விவசாயிகளுக்கு புரியும்.பாம்பு, பறவை, குளவி, தேனீ, தவளை, பூனை, பாம்புகள் இயற்கை முறையில் விவசாயத்தை பாதுகாத்தன. சாரைபாம்பு வயல்வெளியில் தினமும் 30 எலிகள் வரை பிடித்து தின்னும். கோழி வளர்க்கும் வீட்டில் கரையான் இருக்காது. பூனை வளர்க்கும் வீட்டில் எலிகள் இருக்காது. அதனால் தான் ‘காக்கை, குருவி எங்கள் ஜாதி’ என்று பாரதியாரும் சொல்லி வைத்தார்.வயலில் காகம், குருவி, ஆந்தைகள் உட்கார ஆங்காங்கே ஒற்றை கம்பில் சிறு பெட்டி வைத்தால் எலியும், பூச்சிகளும் காணாமல் போய்விடும். தாவர பூச்சிகொல்லிகளான அரளி, தும்பை, நொச்சி, துளசி இலைச்சாறு, இலுப்பை, புங்கம், வேப்பெண்ணெய் போன்றவை செய்ய முடியாதவற்றையா ரசாயனங்கள் செய்யப் போகின்றன. தமிழகத்தில் நுாறு வகையான தாவர பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளன.

எண்ணெய் காகிதமும், கருவாட்டு பொடியும் :

கத்தரி, வெண்டையில் காய்ப்புழுவை தடுக்க உயிர் ஒட்டுண்ணிகள் உள்ளன. டியூப் லைட்டுக்கு கீழே எண்ணெய் தடவிய காகிதத்தை கட்டும் முறை இப்போதும் உள்ளது. வயலுக்கு மஞ்சள்நிற காகித ஒட்டுப்பொறியை வைத்தால், அஸ்வினி, சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஒட்டிக் கொள்ளும். பாட்டிலில் துளையிட்டு உள்ளே கருவாட்டுப் பொடி வைத்தால் கொய்யா தோட்டம், மாந்தோப்பில் காணப்படும் பழ ஈக்களை கவர்ந்து அழிக்க முடியும். மயில், கிளி மற்றும் பிற பறவைகளை விரட்ட அக்னி ரிப்பனை கட்டினால் நெருப்பெரிவது போன்றிருக்கும்.தலைவலி, காய்ச்சலுக்கு கடையில் மருந்து வாங்குவது போல, பயிருக்கு பிரச்னை என்றால் கடைக்காரர் தரும் மருந்தை, கண்ணை மூடிக்கொண்டு செடிகள் மீது தெளிக்கின்றனர். ‘இலை மஞ்சளா இருக்கா… பச்சை கலர் பாட்டில் மருந்தை தெளி’ என்று விவசாயம் தெரியாத கடைக்காரர் சொல்வதை நம்பி வாங்குவதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்.

கவர்ச்சி பயிர்கள் போதும் :

வரப்புக்குள்ளே எந்த செடியை நடுகிறோமா அதற்கேற்ப வரப்பு ஓரங்களில் செடிகளை தேர்வு செய்யவேண்டும். வெண்டைக்கு வரப்புப் பயிர் ஆமணக்கு; தக்காளிக்கு ஆப்ரிக்க மரிக்கொழுந்து; கத்தரிக்கு மணத்தக்காளி, மிளகாய்க்கு அகத்தி, காலிபிளவர், முட்டைகோசுக்கு கடுகு செடியை வளர்த்தால் நன்மை செய்யும் பூச்சிகள் பெருகும். தீமை செய்யும் பூச்சிகள் வரப்பு ஓரச்செடிகளில் படிவதால், உள்ளே இருக்கும் பயிர்களுக்கு சேதாரம் ஏற்படாது.60 சதவீத பயிர் பாதுகாப்பை ‘இயற்கை எதிரிகள்’ என நாம் நினைக்கும் தட்டான், ஊசிதட்டான், பொறிவண்டு, நாவாப்பூச்சியினங்கள் தருகின்றன. இவை பயிர்களுக்கு நன்மை செய்பவை. ஆமணக்கு, துவரை, செண்டுமல்லி, கொத்தமல்லி, சூரியகாந்தி, தட்டைபயறு செடிகளின் பூக்கள், நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்திழுக்கும். இப்பூச்சிகள் பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை தின்றுவிடுகின்றன. பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தி இது போன்ற நன்மை செய்யும் பூச்சிகளையும் கொன்றுவிட்டோம். எல்லாவற்றிற்கும் இயற்கை வழியில் தீர்வு இருக்கிறது. அதை தேடி பயன்படுத்துவது நமது கடமை.
-மா.கல்யாணசுந்தரம்,
துறைத்தலைவர்,
பூச்சியியல் துறை,
மதுரை விவசாய கல்லுாரி,
tnaukalyan1@rediffmail.com,
98650 10746.
-தினமலர்

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *