புதுடில்லி: ‘வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கு, கடந்த, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க தவறிவிட்டது’ என, கண்டித்த சுப்ரீம் கோர்ட், சிறப்பு புலனாய்வு குழுவை அமைப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.
கருப்பு பணம்:
‘இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் பலர், வெளிநாட்டு வங்கிகளில், 70 லட்சம் கோடி ரூபாயை, கருப்பு பணமாக பதுக்கி வைத்துள்ளனர். அதை கண்டறிந்து, இந்தியாவுக்கு மீட்டு வர, சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், மூத்த வழக்கறிஞர், ராம் ஜெத்மலானி உட்பட சிலர், வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு மீது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதையடுத்து, கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கைகளுக்காக, 10 உயர் அதிகாரிகள் அடங்கிய கமிட்டியை, மத்திய அரசு அமைத்தது. இந்த வழக்கில், 2011ல், சுப்ரீம் கோர்ட், ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. அதில், ‘மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது’ எனக் கூறியதுடன், கருப்புப் பண விவகாரத்தை விசாரிக்க, விரிவுபடுத்தப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.,) ஒன்றையும் அமைத்தது. இதை எதிர்த்து, மத்திய அரசு தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிறப்பு புலனாய்வு குழு:
இந்த மனு மீதான விசாரணை, நீண்ட நாட்களுக்கு பின், நேற்று, நீதிபதி, எச்.எல்.டாட்டூ தலைமையில், நீதிபதிகள், ரஞ்சனா பிரகாஷ் தேசாய், மதன் பி. லோகுர் ஆகியோர் அடங்கிய, ‘பெஞ்ச்’ முன் வந்தது. மத்திய அரசு சார்பில் வாதாடிய, சொலிசிட்டர் ஜெனரல், மோகன் பராசரன், ”கருப்பு பணம் குறித்து விசாரிக்க, மத்திய அரசால் அமைக்கப்பட்ட கமிட்டி இருக்கிறது. சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தேவையற்றது,” என்றார்.
அவரின் கருத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்க, 1947ம் ஆண்டிலிருந்து எவ்வித நடவடிக்கையும், மத்திய அரசு எடுக்கவில்லை. இதில் நாங்கள் உத்தரவு வழங்கி, மூன்றாண்டு ஆகியும், அதைச் செயல்படுத்த முன்வரவில்லை. வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை, இந்தியாவிற்கு கொண்டு வந்திருந்தால், தனி நபர் வருமானமும், இந்திய பொருளாதாரமும் உயர்ந்திருக்கும். நீதிபதிகளான நாங்கள், 30 சதவீதம் வருமான வரி கட்டுகிறோம். இதுவும் குறைந்திருக்கும். இந்த விஷயத்தில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பதை எதிர்ப்பது, ஏற்புடையது அல்ல. எனவே, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு, நீதிபதிகள் கூறினார்.
தினமலர்