ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவும், அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசு செயல்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் அரசியலமைப்பு சட்டத்தினால் உருவாக்கப்பட்ட பதவிதான் கவர்னர் பதவி. மத்தியில் உள்ள அரசுக்கு ஜனாதிபதியும் மாநிலங்களில் உள்ள அரசுகளுக்கு கவர்னரும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுகளுக்கு துணை நிலை ஆளுநரும் அரசியலமைப்பு சட்டத்தின்படி நிர்வாக ரீதியில் ஒத்துழைப்பு தர வேண்டிய கடமைப்பட்டவர்கள்.

யூனியன் பிரதேசங்களில் பொதுவாக சட்டசபை என்பது இருக்காது. ஆனால், டெல்லி, புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் சட்டசபை அமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களைப்போல மக்கள் பிரதிநிதிகளால் இந்த சட்ட
சபையும் அரசும் செயல்படுகின்றன. இந்நிலையில், மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் யூனியன் பிரதேசங்களை நிர்வகிப்பதால், டெல்லி, புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேச அரசுகளின் ஆட்சி நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுகிறது. அதுவும் துணை நிலை ஆளுநர்களின் மூலம் அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறது.

இந்த பிரச்னையில் டெல்லி யூனியன் பிரதேசத்தில் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி அரசு முதலில் பெரும் பாதிப்பை சந்தித்தது. இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றம் பின்னர் உச்சநீதிமன்றம் மூலம் பிரச்னைக்கு தீர்வு கண்டது. இதேபோல், புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் நெருக்கடியை சந்தித்தது. துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மூலம் ஆட்சி நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டது.

இதனால், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் அரசு திணறியது. மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துவதா அல்லது துணை நிலை ஆளுநரின் தலையீட்டை எப்படி சமாளிப்பது என்பதில் கவனம் செலுத்துவதா என்பதில் முதல்வர் நாராயணசாமி படாதபாடுபட்டார். இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரி அரசின் நிர்வாகத்தில் நேரடியாக தலையிட துணை நிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை என்றும் அமைச்சரவையின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசு ஆவணங்களை கோருவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பிறப்பித்த உத்தரவை செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நடத்த துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. மாநில அமைச்சரவைக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே இதுபோன்ற மோதல் போக்கு நீடித்தால் அது ஜனநாயகத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கிவிடும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றம் உறுதிபட தெரிவித்துள்ளது. இதை அனைவரும் தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுவதே முதிர்ந்த ஜனநாயகத்தில் சிறந்த செயல்பாடாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *