தேசியப் புள்ளிவிவர ஆணையத்தின் (என்எஸ்எஸ்ஓ) தற்காலிகத் தலைவர் பி.சி.மோகனன், உறுப்பினர் ஜே.வி.மீனாட்சி ஆகியோரின் பதவி விலகல்கள் பெரிய விவகாரமாக உருவெடுத்துவருகிறது.

2018 டிசம்பரில் வெளியாக வேண்டிய வேலைவாய்ப்பு பற்றிய தரவுகளை வெளியிட விடாமல் மத்திய அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட அழுத்தமே இவ்விருவரின் விலகல்களுக்குக் காரணம் என்று அறிய முடிகிறது. கடந்த ஐம்பதாண்டுகளில் இருந்திராத அளவுக்கு தற்போது வேலைவாய்ப்பின்மையின் அளவு உச்சத்தில் இருக்கிறது.

அதை மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், வேலையில்லா திண்டாட்டத்தைக் குறைப்பதற்கான அடுத்தகட்ட முயற்சிகள் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். என்எஸ்எஸ்ஓ அமைப்பு, வேலைவாய்ப்பு தொடர்பான ஆய்வுகளை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்கிறது. 2016-17-ல் இந்த ஆய்வு நடந்திருக்க வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாகப் புதிய நடைமுறை உருவாவதால், 2017-18-க்கு ஆய்வு மாற்றப்பட்டது.

தொழிலாளர்களை அதிகம் நேரடியாக வேலையில் ஈடுபடுத்தும் துறைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை, தொழிலாளர் நலத் துறை திரட்டியது. அமைப்புசார் தொழிலாளர்களுக்கான சமூக நலத் திட்டங்களின் சந்தாக்களை அடிப்படையாக வைத்து, புதிய வேலைவாய்ப்புகள் கணக்கிடப்பட்டன. இது துல்லியமாக இல்லை, உண்மையைப் பிரதிபலிக்காது என்று நிபுணர்கள் எச்சரித்தனர். அப்படியும் 2018-19-ல் 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவானதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அவர் அளித்த கடைசி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து பிரதமரும் அவருடைய அமைச்சரவை சகாக்களும் தொடர்ந்து வினோதமான வாதங்களை முன்வைத்துவருகின்றனர். ‘வேலைவாய்ப்புகள் அமைப்பு சாரா தொழில்துறைகளில் உருவாகியுள்ளன. ஆனால், அவை பற்றிய நம்பகமான தகவல்கள்தான் கிடைப்பதில்லை’ என்கின்றனர். ‘வேலைவாய்ப்பு பெருகாமல் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிக்குமா?’ என்றும் கேட்கின்றனர்.

‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி முன்னர் அறிவித்தபடி அதிகம் அல்ல, குறைவுதான்’ என்று ‘நீதி ஆயோக்’ புதிய வகையில் கணக்கிட்டு அறிவித்ததும் என்எஸ்எஸ்ஓ அமைப்புக்கு அதிருப்தியை அளித்திருக்கிறது. நாட்டின் அனைத்துத் துறைகள் தொடர்பாகவும் புள்ளிவிவரங்களைத் திரட்டுவதுடன் அவற்றை ஆய்வுசெய்து அறிவிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட துறையை மீறி, இன்னொரு துறை தானாகவே செயல்பட்டுள்ளது மரபை மீறிய செயலாகும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் என்எஸ்எஸ்ஓ அமைப்பு 2009-10-ல் வீடுகளுக்குக் கிடைக்கும் வருவாய், வேலைவாய்ப்பு தொடர்பாக ஆய்வு நடத்தியது. அதில் வேலைவாய்ப்பு இழப்புகள் குறித்த தரவுகள் கிடைத்தன. அந்த அறிக்கையை அப்படியே வெளியிட்ட காங்கிரஸ் கூட்டணி அரசு, எதிர்க்கட்சிகளுடைய விமர்சனங்களை எதிர்கொண்டது. உலக அளவிலான நிதித் துறை நெருக்கடியால் அப்படி வேலைவாய்ப்பு குறைந்ததைக் குறிப்பிட்டுவிட்டு, நிலைமை சகஜநிலைக்கு வந்த பிறகு 2011-12-ல் மறு ஆய்வுக்கு நடவடிக்கை எடுத்தது. மோடி தலைமையிலான அரசும் இதைத்தான் செய்திருக்க வேண்டும்.

 

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *