வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலையொட்டி சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில் புயல் காரணமாக மரக்காணத்தை ஒட்டியுள்ள கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்படுவதோடு தரைக் காற்றும் பலமாக வீசியது.
புயல் எச்சரிக்கை காரணமாக மரக்காணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள எக்கியார்குப்பம், கைப்பாணிக்குப்பம், கூனிமேடுக்குப்பம், அனுமந்தைக்குப்பம், கோட்டக்குப்பம், சின்ன முதலியார்சாவடி, பெரிய முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் உள்ளிட்ட 19 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. மீன்வர்கள் தங்களது படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.