சென்னை: சங்கிகள் கூட்டம் எழுதிக் கொடுப்பதை அப்படியே எடப்பாடி பழனிசாமி வாசித்து வருகிறார் என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.சென்னை புளியந்தோப்பில் அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். திருவிக நகர் தெற்கு பகுதி, 73, 73அ வட்டம் பகுதிக்குட்பட்ட நியூ பாரன்ஸ் ரோடு, தாடமக்கான், புளியந்தோப்பு டிக்காஸ்டர் ரோடு உள்ளிட்ட பகுதியில் 141 நாளாக அன்னம் தரும் அமுதகரங்கள் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நேற்றைக்கு முன்தினம் அதிமேதாவி தனமாக தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அறிய பல சொற்களை சரித்திரத்தில் இடம்பெறுகிற அளவிற்கு கூறியிருக்கிறார். இந்த ஆட்சியில் கலைக்கல்லூரிகள் அரசின் சார்பில் துவங்கப்பட வேண்டியதுதானே என்கிறார். 41 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இந்த அரசு துவங்கி இருக்கிறது.
கோயில் கட்டிடங்களை போன்ற பிரிவுகளை உள்ளடக்கி கல்லூரிகளை தொடங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டமே சொல்கிறது. அந்த வகையில்தான் புதிதாக இந்த ஆட்சியில் 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டது. அண்டை மாநிலங்களிலும் இதுபோன்று கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக, அவதூறு கற்பிக்க முடியவில்லை என்பதற்காக புதியதாக சேர்ந்திருக்கின்ற சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக பல முரணான வார்த்தைகளை பேசியிருக்கிறார் பழனிசாமி.
எப்படி கோயில் நிதியில் இருந்து கல்விக்கூடங்களை நடத்தலாம் என்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். அவரது தலைவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2014ல் பழனி ஆண்டவர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்திருக்கிறார். கடந்த ஆட்சி காலங்களிலேயே இந்து சமய அறநிலையத்துறை சார்பாக எண்ணற்ற பள்ளிகள், கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கிற சங்கிகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு கோயில்கள் இந்து சமயநிலையத்துறையில் இருந்து விடுபட வேண்டும் என பாஜவுக்கு ஊதுகோலாக இருந்து எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது. தகுந்த பாடத்தை மக்கள் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பரிசாக அளிப்பார்கள். அவர் காலத்தில் அவர் இந்து சமய அறநிலையத் துறையினுடைய வருமானத்தை எடுத்து கல்லூரிக்கு கூடுதல் கட்டடங்களை திறந்து இருக்கிறார்.
அவருக்கு இந்த பதவி கிடைக்க காரணமாக இருந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கல்லூரிகள் கட்டப்பட்டிருந்தது. அதையும் சதி செயல் என்கிறாரா?
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கட்டப்பட்ட கல்வி கட்டிடங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை வருமானத்திலிருந்து கட்டப்பட்டது தான். அது அரசின் நிதியிலிருந்து கட்டப்பட்டது அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். அறியாமையில் இருக்கிற எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள் கூட்டம் எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார். இவ்வாறு கூறினார்.
* அறநிலையத்துறை கல்லூரி கேட்டு பேரவையில் கோரிக்கை வைத்த அதிமுக
அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‘நேற்றைக்கு முன்தினம் பழனிசாமி கோயம்புத்தூரில் பேசும் போது அவருடைய அருகாமையில் அம்மன் அர்ஜுன் என்ற சட்டப்பேரவை உறுப்பினர் நின்று கொண்டிருந்தார். அவர் இதே சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது, அவர் மாவட்டத்திற்கு மருதமலை கோயில் சார்ந்த இடத்திற்கு ஒரு பொறியியல் கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்தார்’ என்றார்.
The post அதிமுக ஆட்சியிலேயே கோயில் நிதியில் கல்லூரிகள் சங்கி கூட்டம் எழுதிக் கொடுப்பதை அப்படியே எடப்பாடி வாசிக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு appeared first on Dinakaran.