அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தியவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடுவதில் மவுனம் சாதிப்பது ஏன்?கபில் சிபல்

kabil-sibal300

புதுடெல்லி,

அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்திய பா.ஜனதாவினர், ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் மவுனமாக இருப்பது ஏன்? என்று கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜீவ் கொலையாளிகள்

ராஜீவ் காந்தி கொலையாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, கருணை மனு மீது முடிவு எடுக்க காலதாமதம் ஆனதை காரணம்காட்டி சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்த நிலையில் அந்த 3 பேர் உள்பட ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.இதனை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி 20&ந் தேதி தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது. 7 பேர் விடுதலை தொடர்பான இந்த வழக்கை நேற்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

கபில் சிபல் கருத்து

இந்த நிலையில் இதுபற்றி மத்திய சட்டத்துறை மந்திரி கபில் சிபல் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பாரதீய ஜனதா கட்சியின் எந்த தலைவரும் ராஜீவ் காந்தி கொலையாளிகளை தூக்கில் போடுவது குறித்து பேசியதாக எங்களுக்கு தெரியவில்லை.அவர்கள் பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் பாராளுமன்றத்திலும், வெளியிலும் பேசியிருக்கிறார்கள். ஆனால் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக 20 வருடங்களாக அமைதியாக இருக்கிறார்கள்.

மோடி மவுனம் ஏன்?

அவர்கள் தீவிரவாதத்துக்கு எதிராக போராடவில்லை. வாக்குகளை குறிவைத்தே பேசுகிறார்கள். ஏன் நரேந்திர மோடி கடந்த 15 வருடங்களாக ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தவில்லை?
இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP