அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே வங்கியில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அம்பத்தூர் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கர்நாடகா வங்கி இயங்கி வருகிறது. நேற்று மாலை வேலை முடிந்ததும் ஊழியர்கள், வங்கியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். வங்கிக்கு, இரவு நேர காவலாளி ஒருவர் பணியில் இருந்து வருகிறார்.இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்ததும் காவலாளி அதிர்ச்சியடைந்தார்.
உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அம்பத்தூர் போலீசார் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் தீ வங்கி முழுவதும் பரவியது. ஜன்னல் கண்ணாடிகள், அரை கண்ணாடிகள் உடைந்து சிதறியது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து மற்ற கட்டிடங்களுக்கும் தீ பவராமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வங்கியில் உள்ள ஆவணங்கள் மற்றும் இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதமானது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது சமூக விரோதிகளின் கைவரிசையாக உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post அம்பத்தூரில் அதிகாலை பயங்கரம்; கர்நாடகா வங்கியில் பயங்கர தீ: ஆவணங்கள், இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.