சென்னை: போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக டிசம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்தில் போலீஸார் அலுவல் ரீதியாக பயணம் செய்வதற்கு எந்தவொரு அடையாள அட்டையும் வழங்கப்படாமல் இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக, அரசு பேருந்து நடத்துநர்களுக்கும்,போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம், மோதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
இதை கருத்தில் கொண்டு, அரசு பேருந்துகளில் மாவட்டத்துக்குள் பயணம் செய்யும் வகையில் காவலர் முதல் ஆய்வாளர் வரை நவீன அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் 3,191 ஆய்வாளர்கள், 8,245 உதவி ஆய்வாளர்கள், 1,13,251 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், இரண்டாம் நிலைக் காவலர்கள் என மொத்தம் 1,24,867 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.29.96 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.