அரசு விளம்பரத்துக்காக வரி பணத்தை வீணடிப்பதா? சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி

Tamil_News_large_960967

புதுடில்லி : அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்கள் என்ற பெயரில், மக்களின் வரிப் பணத்தை, மத்திய, மாநில அரசுகள், வீணடிப்பதை தடுக்கும் வழிமுறைகளை உருவாக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது.

தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு:
மத்தியிலும், மாநிலங்களிலும், ஆளும் கட்சியாக இருப்பவர்கள், அரசியல் ஆதாயம் அடைவதற்காக, தங்களை விளம்பரப்படுத்தி கொள்கின்றனர். இதற்காக, மக்களின் வரிப் பணத்தை தவறாக பயன்படுத்தி, விளம்பரம் கொடுக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அரசு சார்பில் விளம்பரம் கொடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு, தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, ‘பெஞ்ச்’ முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:விளம்பரம் என்ற பெயரில், மக்கள் வரிப் பணம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதற்காக, வழிகாட்டும் குறிப்புகளை உருவாக்க, மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள, தேசிய நீதித்துறை அகாடமியின் தலைவர் மாதவ மேனன் தலைமையில், மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இதில், லோக்சபா முன்னாள் செயலர் டி.கே.விஸ்வநாதன், மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு, விளம்பரங்களை முறைப்படுத்துவது குறித்த வழிமுறைகளை ஆய்வு செய்து, மூன்று மாதங்களுக்குள், அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP