ஆன்லைன் ரம்மியை தடுக்க தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் ரம்மிக்கு எதிராக முந்தைய அதிமுக அரசு ெகாண்டு வந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. உச்ச நீதிமன்றம் அது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு என்று கூறிவிட்டது. ஆன்லைன் ரம்மிக்கு எதிராக வலுவான காரணங்களை அதிமுக அரசு நீதிமன்றத்தில் எடுத்து வைக்க தவறியதால் இன்று வரை பலர் தற்கொலை செய்து கொண்டனர். பொதுமக்களை தடுக்க வேண்டிய காவலர்கள் கூட ரம்மி விளையாட்டு மயக்கத்தில் கடனாளியாகி சிக்கிக்கொண்டனர்.

ஆன்லைனில் உள்ள சாதாரண விளையாட்டுகளில் பணத்தை இழக்க வேண்டியது இல்லை. ஆனால்  ரம்மி  விளையாடும் பலர் சொந்த பணத்தை மட்டுமல்ல, கடன் வாங்கி கூட விளையாடும் அவலத்திற்கு சிக்குகிறார்கள். எளிதாக பணம் சம்பாதிக்கும் ஆசை தான் இதற்கு காரணமாகி விடுகிறது. அடுத்தது கடனை அடைக்க போடும் திட்டம் சமூகத்திற்கு எதிரானதாக மாறி விடுகிறது அல்லது அவர்களின் உயிரை பறித்து விடுகிறது. இந்த மோசமான ஆட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகம் முழுவதும் எழுந்தது. இதை ஏற்று ஆன்லைன் ரம்மியை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த ஜூன் 10ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அறிவித்த கையோடு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்தார். இந்த குழு உடனடியாக விசாரணை நடத்தி ஜூன் 26ம் தேதி அறிக்கை அளித்தது. மேலும் இணையதள விளையாட்டுகள் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வாயிலாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் உறுதியான வரைவு சட்டம் தயார் செய்யப்பட்டது. இதற்கு தான் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்ததும் ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் ஏற்படும் உயிர்பலி நிச்சயம் தடுக்கப்படும்.

தமிழக அரசு சட்டத்தை அமல்படுத்தினாலும் கூட கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆன்லைன் ரம்மியை நீக்குவது கடினம்.  ஆனால் புதிய சட்டம் மூலம் ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க முடியும். பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தடை சட்டம் கொண்டு வந்து இருப்பதால் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தால் முழுமையான தீர்வு கிடைக்கும். இருப்பினும் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான முதல்படி. சைபர் குற்றம் தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்க, அதன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டம் நிச்சயம் வழிவகுக்கும். ஆன்லைன் ரம்மியால் பலியாகும் பல உயிர்களை இந்த புதிய சட்டம் காப்பாற்றும் என்று நம்பலாம்.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *