ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 6-ம் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 33-ம் நிலை வீரரான போர்ச்சுகல் வீரர் நூனோ போர்கெஸுடன் மோதினார்.
2 மணி நேரம் 55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல்கராஸ் 6-2, 6-4, 6-7 (3-7), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 7-ம் நிலை வீரரும், 10 முறை சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 25-ம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் மச்சாக்கை வீழ்த்தி 4-வது சுற்றில் கால்பதித்தார்.