இலங்கை ஜனாதிபதி பதவி விலக தயார்: பிரதமர் அலுவலகம்; சபாநாயகர் மூலமே அறிவிப்போம்: ஜனாதிபதி செயலகம்

தான் முன்பு அறிவித்ததைப் போன்று பதவி விலகத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார் என பிரதமர் ஊடகப் பிரிவு இன்று (ஜூலை 11) காலை தெரிவித்தது.

ஆனால், அதே நேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிடும் எல்லாத் தகவல்களும் சபாநாயகர் யாப்பா அபேவர்த்தன ஊடகவே வெளியிடப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியோடு முரண்படும் நோக்கிலேயே ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றும் வகையில் இது அமைந்துள்ளது.

கொழும்பில் கடந்த 9ம் தேதி நடந்த போராட்டத்துக்குப் பின்னர், “ஜனாதிபதி எதிர்வரும் 13ம் தேதி பதவி விலகத் தயார் என தனக்கு அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன” தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அனைத்து அமைச்சர்களும் பதவி விலகத் தயார்’

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை ஏற்படுத்தும் நோக்கில், அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 11) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 13ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையில், சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

”புதிதாக அமைக்கப்படவுள்ள சர்வகட்சி அரசாங்கத்தற்கு இடமளிக்கும் நோக்கில், நாம் அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்கிறோம். அதேபோன்று, புதிதாக உருவாக்கப்படவுள்ள சர்வகட்சி அரசாங்கத்திற்கு நாம் ஆதரவை வழங்குவோம். ஜனாதிபதி அழைப்பு விடுக்காமல், அதிகாரபூர்வமாக அமைச்சரவை கூட இயலாது. இது நாம் சுயாதீனமாக ஒன்று கூடி, நடத்திய கலந்துரையாடல். நாடாளுமன்றத்தினால் உருவாக்கப்படவுள்ள சர்வகட்சி அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், அதன் தன்மை ஆகியன குறித்து, இன்று மாலை நடைபெறவுள்ள அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்” என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published.