உத்தர பிரதேசத்தின் கான்பூரில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த ஒரு சில தினங்களில் புல்டோசர்கள் பயன்படுத்தி கட்டுமானங்களை இடிக்க தடை விதிக்கக் கோரி ஜாமியத் – உலேமா – இ – ஹிண்ட் அமைப்பு தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்கு பதில் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உத்தர பிரதேச அரசு மற்றும் பிரதிவாதிகளுக்கு உச்ச நீதிமன்றம் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
கோடை விடுமுறை கால மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ. எஸ். போபண்ணா மற்றும் விக்ரம்நாத் அடங்கிய இரண்டு நீதிபதிகள் இந்த மனுவை விசாரித்து அடுத்த விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
முன்னதாக, “ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் இடிக்கப்படுவதை தடுக்க உத்தரவிட முடியாது,” என்று கூறிய நீதிபதிகள், “அந்த நடவடிக்கைகள் சட்டத்தின்படி நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்,” என்று தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் கட்டுமானங்களை இடிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதை உத்தர பிரதேச அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடுமாறு ஜாமியத் உலேமா இ ஹிண்ட் அமைப்பு மனுவில் கோரியிருந்தது.
இன்றைய விசாரணையின்போது வாதிடப்பட்ட தகவல்களில் 10 முக்கிய விவரங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
ஒரு வீட்டை புல்டோசர் மூலம் தகர்ப்பது சட்டப்பூர்வமானதா, சட்டவிரோதமானதா?
1) இன்றைய விசாரணையின்போது, மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்தர் உதய் சிங், குற்றவியல் மனுவின் அடிப்படையில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்பது தொழில்நுட்ப ரீதியாக இது டெல்லிக்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும் என்று வாதிட்டார்.
2) உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்த பிறகும் கட்டுமானங்கள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுவது தொடர்கிறது. இத்தகைய காட்சிகளை நாங்கள் இதுவரை கண்டதில்லை. எனவேதான் நீதிமன்றத்தின் தலையீட்டை கோரி இடைக்கால மனுவை தாக்கல் செய்ய நேர்ந்துள்ளது. இங்கே அரசியலமைப்பும் அதை அமல்படுத்த சட்டமும் உள்ளது. அவர்கள் எப்படி கட்டுமானங்களை இடிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தார்கள் என்பதை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று வழக்கறிஞர் சந்தர் உதய் சிங் கூறினார்.
3 ) நீதியை வழங்க இப்போது புல்டோசர் பயன்படுத்தப்படுவது புதிய முறையாக மாறிவிட்டதா? அவர்களால் எப்படி இவ்வாறு செய்ய முடிகிறது? என்று ஜாமியத் உலேமா அமைப்பின் மற்றொரு வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
4) இடிக்கப்பட்ட குடியிருப்புகள் ‘சட்டவிரோத கட்டுமானங்கள்’ என்று கூறி இந்த நடவடிக்கை நியாயப்படுத்தப்படுகிறது. புல்டோசரைக் கொண்டு வீடுகள் இடிக்கப்படுகின்றன. சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக புல்டோசர் கொண்டு நடவடிக்கை பாயும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார் வழக்கறிஞர் சந்தர் உதய் சிங்.
இடிப்பு நடவடிக்கை
5 ) “இந்த விவகாரத்தில் நோட்டீஸ் எங்கே கொடுக்கப்பட்டது?” எவராவது சட்டவிரோதமாக வீடோ கட்டுமானங்களை எழுப்பியிருந்தால் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 நாட்களும் அதிகபட்சமாக 40 நாட்களும் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சந்தர் சிங் தெரிவித்தார்.
அரசு தரப்பு வாதம்
6) இந்த வழக்கில் உத்தர பிரதேச மாநில அரசு சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா ஆஜராகி, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை. இந்த இடிப்பு நடவடிக்கை ஜஹாங்கிர்புரியில் தொடங்கியது. இடிப்புக்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர்கள் சார்ந்த மத மாச்சரியங்களைக் கடந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது என்று வாதிட்டார்.
7) இந்த வாதத்துக்கு ஆட்சேபம் தெரிவித்த வழக்கறிஞர் சந்தர் சிங், என்ன நடக்கிறதோ அது அரசமைப்புக்கு எதிரானது. அதிர்ச்சியூட்டக் கூடியது. இது ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.
8) அதற்கு ஆட்சேபம் தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா, இந்த பிரச்னை அரசியலாக மாறுவதற்கு நான் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் சட்டவிதிகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கட்டுமானம் செய்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அவர்கள் செயல்படவும் அவகாசம் வழங்கப்பட்டது என்று கூறினார்.
9) உத்தர பிரதேச அரசுக்காக ஆஜரான முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே, 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு 17ஆம் தேதி உட்பட பல்வேறு தேதிகளில் கட்டுமானத்தை ஏன் இடிக்கக் கூடாது என கேள்வி எழுப்பி நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த கட்டுமானங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால், அந்த சீல் உடைக்கப்பட்டது என்று கூறினார்.
10) வடக்கு டெல்லியில் இதுபோன்ற ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது அந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுஉத்தரவு வரும்வரை தடை விதித்தது. அதை ஒத்த சம்பவம்தான் உத்தர பிரதேசத்திலும் நடப்பதால் அதை உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் நடவடிக்கை. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் முனிசிபல் சட்டத்தையும் இதர சட்டத்தையும் மீறி நடந்ததாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரரான ஜாமியத் உலேமா – இ – ஹிண்ட் என்ற அமைப்பு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது.