சென்னை: ஓய்வூதிய இயக்குநரகத்தை மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால், இனி பழைய ஓய்வூதியத் திட்டம் எந்த காலத்திலும் தமிழகத்தில் மீண்டும் வராது என கருத்து தெரிவித்துள்ள கட்சித் தலைவர்கள், இதற்காக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், மகளிர் இருசக்கர மானியம் வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கியது. தற்போது அரசு தகவல் தொகுப்பு விவர மையம், ஓய்வூதிய இயக்குநரகம், சிறு சேமிப்பு இயக்குநரகம் போன்றவற்றை கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையுடன் இணைத்து இந்த மூன்று துறைகளுக்கும் மூடுவிழா நடத்தி அரசாணை பிறப்பித்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் கானல் நீராகியுள்ளது. முதல்வருக்கு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமென்ற அக்கறை இருக்குமானால் இந்த ஆணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.