கடந்த 90 ஆண்டுகளாக இலங்கை மக்களை வாட்டி வதைக்கும் 9 ராஜபக்சேக்கள்: ரூ.4.57 லட்சம் கோடி கடனுக்காக நாட்டையே அடமானம் வைக்கும் நிலை

இலங்கை என்றாலே ‘3டி’தான். இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளம், தேயிலை தொழிற்சாலை, ஜவுளி. இந்த 3 தொழில்களே இலங்கையின் பிரதான உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகித்தது. குட்டி நாடாக இருந்தாலும், சுற்றுலா தளங்களில் கலைநயங்களால் உலக மக்களை கட்டி இழுத்தது இலங்கை. இயற்கையோடு அமைக்கப்பட்டுள்ள நட்சத்திர ஓட்டல்கள், உள்கட்டமைப்பு மற்றும் வடிவமைப்புகள் என சொல்லி கொண்டே போகலாம். பழமை மாறாத தேயிலை தொழிற்சாலையுடன் ரிசார்ட்டுகள், விதவிதமாக, கலர் கலராக ஆடைகள் என சுற்றுலா பயணிகளை இழுத்து போட்டது இலங்கை. இதை ரசிப்பதற்கும், அனுபவிக்கவும் ஒரு பட்டாளமே உள்ளது. இதன் மூலம் நன்றாக வருமானம் பார்த்தது இலங்கை அரசு.

ஆனால், தற்போது இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், உணவு, பெட்ரோல், டீசல், மருந்து, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் ஏதுவும் கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலை உள்ளது. இலங்கை இந்த அளவுக்கு மோசமான ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு 90 ஆண்டுகளாக ஆட்டி படைக்கும் ராஜபக்சே குடும்ப அரசியல்தான் காரணம். தாத்தா, அப்பா, மகன், மகள், பேரன், பேத்திகள் என பட்டியல் நீண்டே கொண்டே போகிறது. பல தசாப்தங்களாக மாறி, மாறி ஒட்டு மொத்த அரசு அதிகார பதவிகளிலும் ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் நுழைந்து, நாட்டை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல சரியான பொருளாதார கொள்கையை அமைக்காததால், நாட்டின் வளங்கள் அனைத்தும் சீரழிந்து மக்கள் நடு தெருவுக்கு வந்துள்ளனர்.

ஒரு நாடு செழிப்பாக இருக்க வேண்டுமென்றால் பொருளாதாரம் மிகவும் முக்கியம். இதை செயல்படுத்த பொருளாதார கொள்கை மிகவும் முக்கியம். அதற்கு பொருளாதார மேதைகள் அதை விட முக்கியம். 90 ஆண்டுகளாக இலங்கையை ஆட்டிப்படைத்து வரும் ராஜபக்சேக்கள் இதை எதையும் செய்யவில்லை. இதன் காரணமாக, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து வாங்கிய ₹4.57 லட்சம் கோடி கடனுக்காக நாட்டையே அடமானம் வைக்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையை அழிவு பாதைக்கு கொண்டு சென்ற ராஜபக்சே குடும்பத்தின் வரலாறு 1930ல் இருந்து தொடங்குகிறது. இலங்கை அரசின் அதிகார பதவியில் அமர்ந்த ராஜபக்சே குடும்பத்தின் முதல் உறுப்பினர் டான் மேத்யூ ராஜபக்சே. இவர் 1896ம் ஆண்டு பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் டான் கரோனலிஸ் சார்லஸ், டான் ஆல்வின். இவர்களின் தந்தை டான் டேவிட் ராஜபக்சே. இவர் மரணமடைந்த பிறகு தனது பள்ளி படிப்பை 16 வயதில் விட்டு விட்டு தாய்க்கு உதவியாக மேத்யூ ராஜபக்சே இருந்தார். 1922ம் ஆண்டு மடிஹேவைச் சேர்ந்த நீ வீரதுங்கவை மணந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவை ஆதரித்தது மூலம் 1931ல் முதன் முதலில் அரசியலில் நுழைந்தார். 1936ல் நடைபெற்ற இலங்கை அரச சபைத் தேர்தலில், 12,106 வாக்குகள் பெரும்பான்மையுடன் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான இரண்டாவது அரச சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1945ம் ஆண்டு மே 18ம் தேதி மாநில கவுன்சிலில் பணியாற்றிய போது திடீரென மாரடைப்பால் இறந்தார். இதையடுத்து, அவரது பதவிக்கு அவருடைய இளைய சகோதரர் டான் ஆல்வின் ராஜபக்சே முன் நிறுத்தப்பட்டார். அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம்தான் ராஜபக்சே வாரிசு அரசியல் உருவானது.

1. டான் ஆல்வின் ராஜபக்சே: இவர் 1905, நவம்பர் 5ம் தேதி பிறந்தார். இவர் கல்வி படிப்பை முடித்து, நெல் வயல்களையும் தென்னந்தோப்புகளையும் கொண்ட குடும்ப எஸ்டேட்டை நிர்வகிக்க உதவியாக இருந்தார். கிரிக்கெட் வீரராகவும் ஜொலித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பெலியத்த தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக (1947-1965) தேர்ந்தெடுக்்கப்பட்டார். லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் விஜயானந்த தஹநாயக்கவின் அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக பணியாற்றினார். இவர், இலங்கையின் பிரதமர், அதிபர்களின் தந்தை என்ற பெருமைக்குரியவர். இவருக்கு சமல், ஜெயந்தி, மகிந்த, சந்திரா, பசில், கோத்தபய, டட்லி, ப்ரீத்தி மற்றும் கந்தானி ஆகிய 9 பிள்ளைகள்.

2. ஜெயந்தி ராஜபக்சே: இவர் 1942ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள். ஹிமால் லலீந்திர ஹெட்டியாராச்சி, ரங்கனி ஹெட்டியாராச்சி. இதில் ஹிமால் லலீந்திர ஹெட்டியாராச்சி ஸ்கை டிவி நெட்வொர்க்கின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.

3. மகிந்தா ராஜபக்சே : இவர் 18 நவம்பர் 1945ம் ஆண்டு பிறந்தார். வழக்கறிஞர். இலங்கை நாடாளுமன்றத்திற்கு 1970ம் ஆண்டு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 முதல் 2015 வரை லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பணியாற்றினார். 2005 நவம்பர் 19ம் ஆண்டு முதல் முறையாக அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். 2010ல் இரண்டாவது முறையாகவும், 2015ல் மூன்றாக முறையாகவும் அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். 2015ம் ஆண்டு ஜன.5ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஐக்கிய அரசாங்கத்தில் இருந்து விலகிய பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்தா ராஜபக்சே நியமிக்கப்பட்டார். 15 டிசம்பர் 2018 அன்று ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். விக்கிரமசிங்கே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். ராஜபக்சே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். 2019ல் லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி லங்கா பொதுஜன கூட்டமைப்பின் தலைவரானார். 2019ம் ஆண்டு இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவால் மீண்டும் பிரதமராக 21 நவம்பர் 2019 அன்று நியமிக்கப்பட்டார். இவரது மகன்கள் நமல் ராஜபக்சே, யோஷித்தா ராஜபக்சே, ரோஹித்தா ராஜபக்சே. இவர்களில் நமல் ராஜபக்சே விளையாட்டுத் துறை அமைச்சராகவும், கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் உரிமையாளராகவும் உள்ளார். யோஷித்தா ராஜபக்சே பிரதமரின் தலைமை அதிகாரியாகவும், கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் உரிமையாளராகவும் உள்ளார்.

4. சந்திரா டியூடர் ராஜபக்சே : இவர் 1947ம் ஆண்டு பிறந்தார். இவர் நிதி அமைச்சரின் தனிச் செயலாளர், துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் தனிச் செயலாளராக பணியாற்றினார். 2018ம் ஆண்டு மறைந்தார். இவருடைய மகன் சமிந்தா ராஜபக்சே, அதிபரின் ஆலோசகர் மற்றும் ஹம்பாந்தோட்டை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

5. கோத்தபய ராஜபக்சே: இவர் 1949ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி பிறந்தார். அரசியல்வாதி மற்றும் ராணுவ அதிகாரி. ராணுவத்தில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்று தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழைந்து, 1998ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். 2005ல் இலங்கை திரும்பினார். மகிந்தா ராஜபக்சே நிர்வாகத்தின் கீழ் 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சரின் செயலாளராக பணியாற்றியுள்ளார். இவரது ஆட்சிக் காலத்தில், இலங்கை ஆயுதப் படைகள் இலங்கை உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து அதன் தலைவர் பிரபாகரனை 2009ல் சுட்டுக் கொன்றன. தற்போது, இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், இவரும் மக்களின் கோபத்துக்கு ஆளாகி சிக்கி தவித்து வருகிறார்.

6. பசில் ராஜபக்சே: இவர் 1951ம் ஆண்டு பிறந்தார். இவர் அபிவிருத்தி அமைச்சர் (2010-15), நாடாளுமன்ற உறுப்பினர் (2007-15), அதிபரின் மூத்த ஆலோசகர் (2005-), உத்துரு வசந்தயவின் தலைவர் (2009-13). இவருக்கு ஒரு செல்ல பெயர் உள்ளது. அது மிஸ்டர் 10%. எந்த அரசு திட்டமாக இருந்தாலும் பசிலுக்கு 10% கமிஷன் தந்து விட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

7. டட்லி ராஜபக்சே : இவர் 1957ம் ஆண்டு பிறந்தார். இவர் அரசு நிர்வாக பதவிகள் எதுவும் அனுப்பவிக்கவில்லை.

8. பிரீத்தி ராஜபக்சே : இவர் 1959ம் ஆண்டு பிறந்தார். பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் உறுப்பினர், இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர், காப்புறுதி சபை உறுப்பினர், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர், பிஜெ பார்மா கேட் (சிலோன்) லிமிடெட் தலைவர், மெட் 1 (பிரைவேட்) லிமிடெட் தலைவர், எம்ப்ளாய்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் தலைவர், தேசிய மீன் வளர்ப்பு மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர், இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத் ஸ்தாபனத்தின் தலைவர். தொழில் ரீதியாக அனைத்தையும் தனது கணவர் லலித் சந்திரதாசாவுடன் சேர்ந்து கவனித்து கொண்டவர். லாஸ் ஏஞ்சல்சின் இலங்கை தூதரக அதிகாரியாக லலித் சந்திரதாசா பணியாற்றி வருகிறார்.

9. காந்தானி ராஜபக்சே: இவர் 1961ம் ஆண்டு பிறந்தார். இவர் அரசியலில் ஜொலிக்கவில்லை என்றாலும் இவரது மகன் நிபுண ரணவக்க நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவ்வாறு ராஜபக்சே குடும்ப உறுப்பினராக பட்டியல் இன்னும் நீள்கிறது. மகிந்தா மற்றும் கோத்தபயா ராஜபக்சேவின் சகோதரி மகள் கமலா விக்ரமசூர்யாவின் மகன்கள் ஜலியா விக்ரமசூர்யா (அமெரிக்காவின் இலங்கை தூதர்) மற்றும் பிரசன்னா விக்ரமசூர்யா (மாஜி ராணுவ அதிகாரி), மகிந்தா மற்றும் கோத்தபயா ராஜபக்சேவின் உடன் பிறந்த சகோதரர் சாமல் அமைச்சராகவும், அவரது மகன் சாஷும் அமைச்சராகவும் இலங்கை அரசு நிர்வாகத்தில் பங்கெடுத்துள்ளனர்.
* இலங்கையின் 70 சதவீத வர்த்தகம் ராஜபக்சே குடும்பம் செய்து வருகிறது. இவர்களின் தவறான பொருளாதார கொள்கையால் இன்று ஏழைகளும் பட்டினியால் திண்டாடுகின்றனர். பணம் இருந்து பணக்காரனும் பட்டினியால் திண்டாடுகின்றான். விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது கூட இந்த நிலைமை இலங்கைக்கு வரவில்லை. தமிழர்களுக்கு எதிரான போரில் வென்ற ராஜபக்சேவை தூக்கி கொண்டாடிய சிங்களர்கள் இன்று அதே ராஜபக்சேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி விரட்டி அடிக்க துணிந்து உள்ளனர்.

முதல் அரசியல் வாரிசின் வாரிசுகள் : ராஜபக்சேவின் முதல் அரசியல் வாரிசு டான் மேத்யூ ராஜபக்சேவுக்கு மூன்று மகன்கள். இதில் லக்ஷ்மன் அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் 1947-52, 1956-60, திஸ்ஸமஹாராம நாடாளுமன்ற உறுப்பினர் 1960-65, முல்கிரிகல நாடாளுமன்ற உறுப்பினர் (1976-77) மற்றும் ஜார்ஜ் முல்கிரிகல நாடாளுமன்ற உறுப்பினர் 1960-76. இரண்டு மகள் அரசியலில் கோலோச்சியனர். இதுதவிர நீல் குமாரதாச மற்றும் எஸ்தர் குர்லி, பேர்ல் (பெரி) ஜெயந்தி, கமலா மற்றும் ரூபி லலிதா என 4 மகளும் மேத்யூ ராஜபக்சேவுக்கு உண்டு.

11 அமைச்சர்கள் 40 அரசு பதவிகள்: மகிந்தா ராஜபக்சே 2010-15ம் வரை அதிபராக இருந்த காலத்தில் அமைச்சர் பதவி அல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்கள் 40க்கும் மேற்பட்டோர் அரசு பதவியில் இருந்தனர். இதில் நிறைய பேர் நிதி மோசடி தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அமெரிக்க குடியுரிமை பெற்ற தற்போதைய அமைச்சர் பசில், நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரது மனைவி மற்று மகள் விசாரிக்கப்பட்டனர். மகிந்தா மற்றும் கோத்தபயா ராஜபக்சே அதிகாரத்தில் இருந்தபோது, அவரது குடும்பத்தினர் 11 பேர் அமைச்சர்களாக இருந்தனர். மற்ற குடும்ப உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் அதிபர் தலைமையகத்தில் பணி அமர்த்தப்பட்டனர்.

அதிபர்களின் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: கடந்த 1965 பொதுத்தேர்தல் தோல்வி அடைந்த டான் ஆல்வின் ராஜபக்சே, தனது அரசியல் அதிகாரத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல், பொருள் செல்வமும் இல்லாமல் தவித்தார். இந்த காலத்தில் அவரது பிள்ளைகள் சமல், மகிந்த, பசில், கோத்தபய, சந்திரா ஆகியோர் கொழும்புவில் படித்து வந்ததால், அவர்களின் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டார். இதனால், தனது வாகனத்தை விற்று, தென்னை தோப்புகளை குத்தகைக்கு எடுத்து, குடும்பத்தை கஷ்டப்பட்டு நடத்தி வந்தார். 1967 நவம்பரில் கடுமையாக நோய் வாய்ப்பட்டபோது மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனம் இல்லாமல் தவித்தும், தாமதமாக அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *