சென்னை: கள்’ மதுவை உணவு என தவறுதலாக கூறும் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு மருத்துவத் துறைக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில், தமிழ்நாட்டில் ’கள்ளு, சாராயம்’ வடித்தல், விற்றல், குடித்தல் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு (4)-ன்படி தடை செய்யப்பட்டுள்ளதை தாங்கள் நன்கு அறிவீர்கள். இருப்பினும், இவை அனைத்தும் தெரிந்திருந்தும் அண்மைக் காலமாக சில அரசியல் கட்சியினர் “கள் எங்கள் உணவு – அது எங்கள் உரிமை” எனும் கோசத்துடன் பொதுவெளியிலும், சமூக வலைதளங்களிலும் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட, பெரியதாழையில் சட்ட விரோதமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது ஆதரவாளர்கள் பனை மரத்தில் ஏறி ’கள்’ இறக்கிக் குடித்து, அதை அங்கிருந்தவர்களுக்கும் கொடுத்துக் குடிக்கச் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, ”பனை ஏறி ’கள்’ இறக்குவோரைக் கைது செய்தால் காவல் நிலையங்கள் உடைத்தெறியப்படும்” என அச்சரகத்திற்குட்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் முன்னிலையிலேயே மேடையில் அரிவாளைத் தூக்கிக் காட்டி எச்சரித்துள்ளார்.
மேற்படி கூட்டப்பட்டக் கூட்டம் குற்றச் செயலைச் செய்வதற்காகச் சட்டவிரோதக் கூட்டமாகும். இது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் பிரிவு 189(1)(b) r/w 4(1)(a)-ன் படியும், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 பிரகாரமும் தண்டனைக்குரிய குற்றச் செயல்களாகும். நாம் தமிழர் கட்சி உட்பட சில சங்கங்களின் இந்த சட்டவிரோதச் செயலைத் தடுத்து நிறுத்தக் கோரி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வழக்கறிஞர் து. ரமேஷ்குமார் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலையத்திலும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும்; புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடமும் ஜூன் 14 ஆம் தேதியே புகார் மனு அளிக்கப்பட்டது.
எனினும் அந்த சட்டவிரோதச் செயல் தடுத்தும் நிறுத்தப்படவில்லை; சம்பவத்திற்கு அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை. எனவே, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யாத தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக் கண்டித்தும், உடனடியாக வழக்குப்பதிவு செய்யக்கோரியும் கடந்த ஜூன் 23 ஆம் தேதி தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருநெல்வேலி காவல் சரகத் துணைத் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து மனுவும் அளிக்கப்பட்டது.
இந்த சமூக விரோத கும்பல்களின் செயல்பாடுகள், தவறான பிரச்சாரங்களை தடுத்து நிறுத்தக் கோரி புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததன் விளைவு, இப்பொழுது தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில் பனை மரங்களிலிருந்து இறக்கப்பட்ட கள்ளுச்சாரய விற்பனையும்; கோயம்புத்தூர், திருப்பூர், ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, பல்லடம் பொள்ளாச்சி பகுதிகளில் தென்னைத் தோப்புகளில் கடைகள் அமைத்து ’கள்’ விற்பனை நடைபெறுகிறது.
அண்மையில் வேலூர் மாவட்டம் பொன்னம்பலம் கிராமத்தில் வெளிப்படையாகவே ’கள்’ இறக்கி விற்பனை செய்து, அதை குழந்தைகளுக்குக் கொடுத்த செய்தியும்; கோவை மாநகரின் எல்லையிலுள்ள பேரூரில் பட்டவர்த்தனமாக ’கள்’ விற்பனை நடைபெறுவதாக பிரசித்தி பெற்ற தமிழ் நாளிதழில் செய்தியும் வெளிவந்துள்ளது. இதை அனுமதித்தால் தமிழகத்தில் சட்ட விரோத கள் விற்பனையும், கள்ளச் சாராய விற்பனையும் அமோகமாக நடைபெறும். மேலும், பள்ளிக் கல்லூரி மாணவர்களிடமும் இவை பரவி விட்டால் தமிழகத்தை மதுவின் பிடியிலிருந்து மீட்க முடியாத அவல நிலை உருவாகிவிடும்.
மேலும், கள் இறக்கும் பானைகளில் ஈக்கள், எறும்புகள், பல்லி உட்பட பலவிதமான கிருமிகளும் உள்ளே விழுவதற்குப் பல்வேறு சாத்தியக்கூறுகள் உண்டு. மேலும், வவ்வால்களுக்கும் கள்ளுக்கும் மிக நெருக்கம் உண்டு. பல நேரங்களில் வவ்வால்களும் கள்ளின் இனிப்பு தன்மை காரணமாக கள்ளைக் குடிப்பதால் அதன் மூலம் நிபா (Nipah) என்ற வைரஸ் பரவி, கேரளாவில் 2018 ஆம் ஆண்டு மட்டும் பலர் திடீர் மரணமடைந்தனர். அதேபோல தமிழகத்தில் மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காகக் கள்ளச் சாராயத்தை குடித்து கடந்த ஆண்டுகளில் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு மரக்காணத்தில் 22 பேரும், கள்ளக்குறிச்சியில் 66க்கு மேற்பட்டோரும் உயிரிழந்தனர். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளான விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா, வைன் போன்றவற்றுடன் கள், சாராயம் போன்ற உள்நாட்டு மது வகைகளையும் தடை செய்தது. இச்சட்டத்தின் பிரிவு 2(9) இல், “மது வகை என்பது கள், சாராயம், சாராவி அல்லது ஒயின், பீர் மற்றும் ஆல்கஹால் அடங்கிய திரவப் பொருள் அனைத்தையும் உள்ளடக்கும்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சில அமைப்புகள் ”கள் ஒர் உணவு – அது எங்கள் உரிமை” என சமூக வலைதளங்களிலும், பொது வெளிகளிலும் தொடர் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.
’கள்’ ஒரு போதைப்பொருள் பாதிப்பை உண்டாக்கக்கூடியது என்பதாலும், ’கள்’ மற்றும் நாட்டுச் சாராயம் போன்றவற்றில் எளிதாக விஷம் கலக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாலும் அவற்றைத் தமிழக அரசே அவற்றைத் தடை செய்துள்ளது. எல்லா மது வகைகளிலும் அடிப்படையாக இருப்பது ஆல்கஹால். ’கள்’ளில் 8 – 15 சதவீத வரை ஆல்கஹால் அளவீடு இருக்கும்; பிற மதுபான வகைகளில் 30 – 40 சதவீதம் வரை ஆல்கஹால் இருக்கும். எனவே போதையை அதிகரிக்க லிட்டர் கணக்கில் கள்ளைக் குடித்து விடுவார்கள். கள்ளில் கலப்படம் செய்வதும் மிக எளிதானது. ’கள் பிற மதுபானங்களை விட அதிகமான பாதிப்புகளை உருவாக்கும் மோசமான மதுபான வகையாகும்.
இது இன்சுலின் சுரக்கும் கணையத்தைப் பாதிப்படையச் செய்து சர்க்கரை நோய் மற்றும் கணையப் புற்றுநோயை அதிகரிக்கும். மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு; மூளை நரம்பு மண்டலப் பாதிப்பு என பலவிதமான நோய்களையும் வரவழைக்கும் மிகக் கொடிய மது ‘ கள்’ ஆகும். ’கள்’ ஓர் உணவு என்று சொல்வதற்கு உண்டான புரோட்டின், விட்டமின்கள், மினரல்ஸ் போன்ற எந்த விதமான சத்துக்களும் அதில் இல்லை. ‘கள்’ளின் ஆபத்து தன்மையை உணர்ந்தும் சிலர் அரசியல் ரீதியாக தவறான பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள். இப்பிரச்சாரத்தை இப்போதே தடுக்கவில்லையெனில், பெரும் சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும்.!
1995 ஆம் ஆண்டுக்கு முன்னர் தென்மாவட்டங்களில் கள் இறக்குதல், நாட்டுச் சாராயம் காய்ச்சுதலை பலரும் குடிசைத் தொழிலாகச் செய்து வந்தனர். இதனால் பலரது உடல் நலம் கெட்டதுடன், போட்டி பொறாமைகளில் ஒரு சாதியின் சாராய ஊறலில் இன்னொரு சாதியினர் விஷம் கலப்பதும், அதனால் பெரிய அளவில் உயிரிழப்புகளும், சாதி பிரச்சனைகளும் அதிகரித்தன. நாம் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ”சாராயம் வடிக்க மாட்டோம்; விற்க மாட்டோம்; குடிக்க மாட்டோம்” என ஒவ்வொரு கிராம மக்களிடமும் சத்தியப் பிரமாணம் பெற்ற பிறகே, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள் இறக்குதல் கிராமப்பகுதிகளில் வெகுவாகக் குறைந்து, சாதி பிரச்சனைகளும் குறைய ஆரம்பித்தன.
மேலும், தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வலியுறுத்தி எங்கள் கட்சியின் சார்பாக 1996-2001, 2011-2016 வரை சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், தீவிரமாக மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 2023ல் சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி, தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ’பூரண மதுவிலக்கு மக்கள் இயக்கத் தொடக்க’ பொதுக்கூட்டம்; மாவட்டந்தோறும் ’மது விலக்கு விளக்கப் பொதுக்கூட்டங்கள்’; டாஸ்மாக் மதுவின் தீமைகளை விளக்கி “டாஸ்மாக் – ’குடி’யின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம்! மது இல்லா புதிய தமிழகம் படைப்போம்” எனும் 1 லட்சம் கையேடுகள் தமிழகம் முழுவதும் விநியோகம் என தொடர்ந்து மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள இன்றைய ஆளும் கட்சி உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்திப் போராடியுள்ளன. எனவே, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது மிக மிக முக்கியமானதாகும். மேலும் தமிழகமெங்கும் அனைத்துப் பெண்மணிகளின் ஒரே கோரிக்கை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதாகும். இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ’கள்’ குறித்த போராட்டங்களையும், ”கள் உணவு – உரிமை” என்ற கோசங்களுடன் பொதுமக்களுக்கு ஊறுவிளைவிக்கும் விசமப் பிரச்சாரங்களையும் கண்டுகொள்ளாமல் விடுவதும், எனவே, ’கள்’ இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொள்ளவும்;
’கள் ஓர் உணவு’ என்ற தவறான பிரச்சாரத்தை சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் மேற்கொள்வோர் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும்; மதுவிலக்கு தடைச் சட்டத்தின் பிரிவு 2(9)ன் படி, ’கள் ஒரு தடை செய்யப்பட்ட மதுபானம்’ எனபதை தமிழக மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக தெளிவுபடுத்துமாறும், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளவும்; வருகிற ஜூலை 27 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள ‘கள்’ விடுதலை மாநாட்டை தடை செய்யவும்; தமிழகத்தில் கோயம்புத்தூர், பொள்ளாச்சி, ஆனைமலை, பேரூர், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ’நீரா’ இறக்க அனுமதி பெற்றுவிட்டு கள்ளத் தனமாக நடைபெறும் ’கள்’ விற்பனையைத் தடுத்து நிறுத்தவும், மீறும் சமூக விரோதச் சக்திகள் மீது குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post கள்’ மதுவை உணவு என தவறுதலாக கூறும் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: மருத்துவத் துறைக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் appeared first on Dinakaran.