காங்., மீதான மக்களின் கோபத்தை தெரிந்து கொள்ளாததே படுதோல்விக்கு காரணம் : சோனியா

soniyaபுதுடில்லி : நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மீது இருந்த கோபத்தை தெரிந்து கொள்ள தவறியதே லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவிற்கு படுதோல்வி அடைந்ததற்கான காரணம் என காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பார்லி., குழு கூட்டத்தில் பேசிய போது சோனியா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் பார்லி., குழுத் தலைவர்களாக சோனியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பேசிய அவர், நம் மீதான மக்களின் கோபத்தை அறிந்து கொள்ள நாம் தவறி விட்டோம்; இதுவே படுதோல்விக்கு காரணம்; இந்த தோல்வியின் மூலம் நாம் தனித்தனியாகவும், ஒட்டுமொத்தமாகவும் தேவையான பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்; மக்கள் மனதில் தங்கள் மீதான களங்கத்தை கட்சி தலைவர்கள் துடைக்க வேண்டும்; மக்கள் மீது கோபம் கொள்வதை விடுத்து அனுபவங்களைக் கொண்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு சோனியா தெரிவித்துள்ளார். 1998ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5வது முறையாக சோனியாவே காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

மக்கள் கொண்டுள்ள அதிருப்தி காரணமாக படுதோல்வி ஏற்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள சோனியாவும், காங்கிரசும் தேர்தலில் தாங்கள் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசித்தனர். அதன் முடிவாக முற்போக்கு மற்றும் மதசார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து, கட்சிக்குள் ஒருங்கிணைந்த செயல்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக தனிப்பெரும் கட்சியாக அதிகாரம் பெற்று விளங்கிய காங்கிரசின் பெரும்பான்மை மோடியின் வருகைக்கு பிறகு வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் அளவிற்கு சுருங்கிவிட்டது. இந்த விரக்தியின் காரணமாகவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலின் போது பிரசாத்தை முன்னின்று நடத்திய ராகுல், தேர்தல் தோல்விக்கு பிறகு நடைபெற்ற காங்கிரஸ் பார்லி., குழு கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தார்.

தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP