மதுரை: கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்கிறது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். கி.மு 8ம் நூற்றாண்டின் கீழடி நாகரிகத்தை கி.மு 3ம் நூற்றாண்டு என திருத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனிடையே கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது. 982 பக்க ஆய்வறிக்கையில் எழுத்துப்பிழையை வேண்டுமானால் திருத்துவேன், உண்மையைத் திருத்த மாட்டேன். எனது கண்டுபிடிப்பைத் திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன் என கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்; கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்கிறது. பாஜகவின் அடிப்படை கருத்தியலுக்கு எதிரானது என்பதால் கீழடி அறிக்கையை சிதைக்க முயற்சி செய்கிறது. வேத நாகரிகத்தை முன்னிறுத்த ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். ஓய்வுபெற்ற தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீராமனிடம் அறிக்கை பெற்று அமர்நாத் அறிக்கையை நிராகரிக்க முயற்சி செய்கிறது. ஒன்றிய அரசின் நடவடிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் மன உறுதியுடன் எதிர்கொள்கிறார் என்றும் கூறினார்.
The post கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.