ஜாம்நகர்: குஜராத்தின் ஜாம் நகரில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் 3,500 ஏக்கர் பரப்பில் அடர்ந்த வனப்பகுதி உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்த வனப்பகுதியில் சிங்கம், புலி,யானை, காண்டாமிருகம் உட்பட 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன.
குஜராத்தின் ஜாம் நகரில் ரிலையன்ஸ் குழுமத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்படுகிறது. இதையொட்டி சுமார் 3,500 ஏக்கர் பரப்பில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் அடர்ந்த வனப்பகுதி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வனத்தில் 200 யானைகள், 300 சிறுத்தைகள், சுமார் 300-க்கும் மேற்பட்ட சிங்கம், புலிகள், 1,000 முதலைகள், இரட்டை தலை பாம்பு உட்பட பல்வேறு வகைகளை சேர்ந்த பாம்புகள் மற்றும் பறவை இனங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக சுமார் 2,000 வகைகளை சேர்ந்த 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன.