in ,

சுபிட்சத்தில் சல்லாபிக்கும் 10 தொகுதிகள்!

Tamil_News_large_939660தேர்தலால் பலதரப்பட்ட மக்களுக்கு குறுகிய கால சுபிட்சம் ஏற்படுவது, அனைவரும் அறிந்தது தான். ஆனால், இந்த விஷயத்தில், சில தொகுதிவாசிகள் மற்றவர்களை விட பாக்கியவான்கள். அந்த தொகுதிகளில், செல்வந்தர்கள் போட்டியிட்டு செலவழிப்பதால்; அடுத்த ஒரு மாதத்திற்கு எந்த வேலையும் பார்க்காமல், வருமானம் மட்டும் பார்க்கலாம் என்ற சவுகரியமான பருவநிலை, அந்த தொகுதிவாசிகளில் பலருக்கு கிடைத்துள்ளது.

அந்த வகையில், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளில் சுபிட்ச பருவம் தொடங்கிவிட்டதாக, உளவுத் துறை போலீசார், அரசுக்கு தகவல் அளித்து வருகின்றனர்.

மத்திய சென்னை: தி.மு.க., வேட்பாளராக தயாநிதி மாறன் அறிவிக்கப் பட்டதுமே, வரப் போகும் பணத்தை நினைத்து கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, மற்ற கட்சி வேட்பாளர்கள் சிலரும் உற்சாகமாக இருக்க; ஆளும் கட்சி தரப்பும் ‘பட்ஜெட்’ஐ அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர்: பெரும் தொழிலதிபர்களான ஜெகத்ரட்சகனும், கே.என்.ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர். இரு பெரு கார் மேகங்கள் மோதுகையில் கொட்டும் கனமழை போல, இங்கு சுபிட்சம் கொட்டுவதாக கூறப்படுகிறது. கணக்கில்லாத கட்டுகளால், பீடா கடைகளிலும் 1,000 ரூபாய் நோட்டுகள் சர்வசாதரணமாக புழங்குவதாக தெரிகிறது. இங்கு கொத்துக் கொத்தாக வாக்காளர்களை அள்ளுவதில் தான் கட்சிக்காரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அரக்கோணம்: இளைஞர் காங்கிரஸ் பொது செயலர் நாசே ராஜேஷ் மற்றும் தி.மு.க., வேட்பாளர் என். ஆர்.இளங்கோவும் பணபலத்திற்கு சொந்தக்காரர்கள். எனவே, தொகுதியில் பணம் பஞ்சாய் பறக்கிறதாம்.

கரூர்: அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, அ.தி.மு.க.,வின் செல்வம் படைத்த வேட்பாளர்களில் முன்னிலையில் உள்ளவர். கட்சி சார்பிலேயே, அனைத்து வேட்பாளர்களின், பெரும்பாலான செலவுகள் ஏற்றுக்கொள்ளப் பட்டாலும், கரூர் வேட்பாளர் கட்சிக்காரர்களை சிறப்பாக கவனிப்பதாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர்: மத்திய அமைச்சராக இருந்த பழனிமாணிக்கத்தை ஓரம்கட்டி, தொகுதியை வாங்கியவர், தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு. அவர் அமைச்சராக இருந்தபோது, அவருக்கு நெருக்கமாக இருந்து, பலன் அடைந்தவர்கள் பலரும், அவருக்காக தொகுதிக்குள் களமிறங்கி கலக்கி வருவதாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் தொகுதியில், கடந்த சில நாட்களாகவே, பணப் புழக்கம் அதிகமாக இருப்பதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரம்பலூர்: இங்கு தான் மற்ற தொகுதிகளைவிட அதிகளவில் செல்வந்தர்கள் மோதுகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் மருதராஜா, ரியல் எஸ்டேட் அதிபர். தி.மு.க., வேட்பாளர் சீமானூர் பிரபு, மணல் குவாரி அதிபர். ஐ.ஜே.கே., வேட்பாளர் பச்சமுத்து, கல்வி நிறுவன அதிபர். மூன்று தரப்பினருக்கும் இடையே கடும் போட்டி உள்ளதால், ஓட்டு விலை ஏறிவிட்டதாக கூறப்படுகிறது. 3,000 ரூபாய் கொடுக்காவிட்டால், யாரும் முகம் கொடுத்து கூட பேசுவதில்லையாம்.

சிவகங்கை: மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதால், அங்கு திறக்கப்பட்ட எண்ணற்ற ஏ.டி.எம்.,களில் ஆயிரம் ரூபாய் கேட்டால் இரண்டாயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தொகுதி மக்கள் உள்ளனர். மற்ற தொகுதிகளில் இருக்கும் காங்கிரசார், சிவகங்கை தொகுதிக்கு வந்து தேர்தல் வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். ‘காங்கிரஸ் வேட்பாளர் ஜெயிக்க, எவ்வளவு தேவையானாலும் செய்வோம்’ என, காங்கிசார் ஜபர்தஸ்தாக நடந்து கொள்ள, எதிர் தரப்பான தி.மு.க.,வும் துளியும் கவலை இல்லாமல் திரிகிறது. தி.மு.க., வேட்பாளர் சுப.துரைராஜ், மணல் கான்ட்ராக்டர் ஒருவரின் ஆசி பெற்றவர் என்பது, குறிப்பிடத்தக்கது.

விருதுநகர்: இந்த தொகுதியில், ஒரு வேட்பாளர் வெற்றி குறித்து படு சீரியசாக இருப்பதால், தனக்கு சென்னையில் இருந்த ஒரு சொத்தை, பிரபல ஜவுளி நிறுவனம் ஒன்றிடம் விற்று, அந்த காசை தேர்தலுக்காக செலவழித்து வருகிறார். விருதுநகர் தி.மு.க., வேட்பாளர் ரத்தினவேலுவுக்கு, முன்னாள் தி.மு.க., அமைச்சரும், விருதுநகர் மாவட்ட செயலருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் முழு ஆதரவு இருப்பதால், தொகுதியில் காற்று நுழையமுடியாத இடங்களை தவிர, மற்ற இடங்களை எல்லாம் ரத்தினவேலு, ‘கவர்’ செய்துவிட்டாராம்.

தேனி: காங்கிரஸ் வேட்பாளராக ஜே.எம்.ஆரூண் போட்டியிடுகிறார். இவருக்கு பணம் ஒரு பொருட்டல்ல. வாக்காளர்களையும், மாற்றுக் கட்சியினரையும் தன் ‘கவனிப்பால்’ உள்ளம் கவர்ந்து தான், ஏற்கனவே இரண்டு முறை லோக்சபாவுக்கு துண்டு போட்டார். அதே பாணியிலேயே இப்போதும் தேர்தலை சந்திக்கிறார்.

திருநெல்வேலி: தி.மு.க.,வில் பெரும்பாலும் பணக்காரர்களே வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தேர்வுக்கான நேர்காணலில், திருநெல்வேலி தி.மு.க., வேட்பாளர் தேவதாச சுந்தரம், ‘எத்தனை ஆனாலும் செலவு செய்வேன்’ என, சொல்லவே தான், அவருக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. அவர் சீட் வாங்கியதற்கு, மாவட்ட நிர்வாகிகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காரணம், அவரின் ‘அன்பளிப்புக்கு’ கட்டுப்பட்டு, அமைதியாக வந்ததை வாங்கி வைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த 10 தொகுதிகளிலும், வாக்காளர்களுக்கு ‘ஜாக்பாட்’ அடித்து இருந்தாலும், அனைவரும் நீலகிரி தொகுதியை சற்று பொறாமையோடு தான் பார்க்கின்றனர். காரணம், இங்கு, ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜா, தி.மு.க., சார்பாக போட்டியிடுகிறார். எண்ணற்ற பூஜ்ஜியங்கள் கொண்ட அந்த எண்ணுக்கு சொந்தக்காரர் என, கூறப்படுகிறது அல்லவா.

-நமது சிறப்பு நிருபர் –

தினமலர்

தேர்தல் பிரசாரத்தில் நக்மாவை முத்தமிட முயன்ற காங். எம்.எல்.ஏ.

பாஜக கூட்டணியில் திமுக இருந்ததே, ஏன்? கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி