சென்னை: சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள அருள்மிகு காளிகாம்பாள் அம்மன் திருக்கோவில் வளாகத்திலிருந்து ஆடி மாதத்தின் ஒரு நாள் அம்மன் கோவில் சுற்றுலா வாகனத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா நிகழ்வினை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள அருள்மிகு காளிகாம்பாள் அம்மன் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் அவர்கள் 160 பயணிகளுடன் கூடிய ஆன்மீக சுற்றுலா வாகனங்களை இன்று (18.07.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, சுற்றுலா இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் தா.கிருஸ்துராஜ், இ.ஆ.ப., இராயபுரம் மண்டலக் குழுத் தலைவர் பி. ஶ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் இசட். ஆசாத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலாவானது( 18.07.2025 )அன்று முதல் (15.08.2025 )வரை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு மாத காலத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படுகிறது.
ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா விவரங்கள்:
* ஆடி அம்மன் சுற்றுலா தொகுப்பு-1
(ஒரே நாளில் 8 அம்மன் கோவில்கள்) சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், பாரிமுனை – அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில், இராயபுரம் – அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோவில், திருவொற்றியூர் – அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில், பெரியபாளையம் – அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், புட்லூர் – அருள்மிகு திருவுடையம்மன் திருக்கோவில், திருமுல்லைவாயில் – அருள்மிகு பச்சையம்மன் திருக்கோவில், திருமுல்லைவாயில் – அருள்மிகு பாலியம்மன் திருக்கோவில், வில்லிவாக்கம் ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சுற்றுலாவிற்கு கட்டணம் ரூ.1000/-. மாகவும், பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.
* ஆடி அம்மன் சுற்றுலா சென்னை தொகுப்பு-2
(ஒரே நாளில் 10 அம்மன் கோவில்கள்) சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு அருள்மிகு கற்பகாம்பாள் திருக்கோவில், மைலாப்பூர் – அருள்மிகு முண்டகண்ணி அம்மன் திருக்கோவில், மைலாப்பூர் – அருள்மிகு கோலவிழியம்மன் திருக்கோவில், மைலாப்பூர் – அருள்மிகு ஆலயம்மன் திருக்கோவில், தேனாம்பேட்டை – அருள்மிகு முப்பாத்தம்மன் திருக்கோவில், தி.நகர் – அருள்மிகு பிடாரி இளங்காளி அம்மன் திருக்கோவில், சைதாப்பேட்டை- அருள்மிகு அஷ்டலெஷ்மி திருக்கோவில், பெசண்ட் நகர் – அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில், மாங்காடு- அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு- அருள்மிகு பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்பாக்கம் ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும்வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சுற்றுலாவிற்கு கட்டணம் ரூ.800/-. மாகவும், பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.
* ஆடி அம்மன் சுற்றுலா – மதுரை தொகுப்பு
மதுரை, ஓட்டல் தமிழ்நாடு, அழகர் கோயில் சாலையிலிருந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில், மதுரை – அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், வண்டியூர்-அருள்மிகு காளியம்மன் திருக்கோவில், மடப்புரம் – அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், விட்டனேரி – அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோவில், தாயமங்கலம் – அருள்மிகு ராக்காயி அம்மன் திருக்கோவில், அழகர் கோவில் ,ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சுற்றுலாவிற்கு கட்டணம் பயணிக்கும் ரூ.1400/-. மாகவும், அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களிலும் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* ஆடி அம்மன் சுற்றுலா – திருச்சி தொகுப்பு
திருச்சியில் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர் – அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில், உறையூர் – அருள்மிகு அகிலாண்டேஸ்வரி திருக்கோவில், திருவானைக்காவல் – அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் -அருள்மிகு உஜ்ஜயினி மாகாளி அம்மன் திருக்கோவில், சமயபுரம் – அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோவில், சிறுவாச்சூர் – அருள்மிகு பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோவில், பொன்மலை – அருள்மிகு உக்கிர காளியம்மன் திருக்கோவில், திருச்சி ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சுற்றுலாவிற்கு கட்டணம் ரூ.1100/- மாகவும், பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.
* ஆடி அம்மன் சுற்றுலா – தஞ்சாவூர் தொகுப்பு
அருள்மிகு வராகி அம்மன் (பெரிய கோவில்) திருக்கோவில், தஞ்சாவூர் – அருள்மிகு பங்காரு காமாட்சி அம்மன் திருக்கோவில், தஞ்சாவூர் – அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில், புன்னைநல்லூர் – அருள்மிகு கற்பரட்சாம்பிகை திருக்கோவில், திருக்கருகாவூர் – அருள்மிகு துர்கை அம்மன் திருக்கோவில், பட்டீஸ்வரம் – அருள்மிகு பாடைகட்டி மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான் – அருள்மிகு நாகநாதசுவாமி கிரிகுஜாம்பிகை திருக்கோவில், திருநாகேஸ்வரம் – அருள்மிகு காசி விஸ்வநாதர் விசாலாட்சி திருக்கோவில், மகாமக குளம், கும்பகோணம் – அருள்மிகு ஐராவதேசுவரர் (பெரியநாயகி அம்மன்) திருக்கோவில், தாராசுரம் ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சுற்றுலாவிற்கு கட்டணம் ரூ.1400/-மாகவும், பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.
இச்சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள், ஆன்மீக அன்பர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோவில்களை ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் தரிசிக்கும் பொருட்டு, 5 நாட்கள் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலாவிற்கும், ஆடி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் இராமேஸ்வரம் (ஆடி அமாவாசை) சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்தச் சுற்றுலாக்களுக்கு http://www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 180042531111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
The post சென்னையில் ஆடி மாதத்தின் ஒரு நாள் அம்மன் கோவில் சுற்றுலா வாகனத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் சேகர் பாபு appeared first on Dinakaran.