கோவை: தமிழகத்தில் முதன்முறையாக அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு விர்ச்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்.) மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை பூ மார்க்கெட் பகுதியில் அம்மணி அம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 625 மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது மாணவர்கள் கற்கும் திறன் அதிகரிக்க விர்ச்சுவல் ரியாலிட்டி மூலமாக ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர். அதன்படி, பள்ளியில் உள்ள விர்ச்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்) ஆய்வகத்தில் 22 மாணவிகள் ஒரே நேரத்தில் கல்வி கற்று வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் முதல் முறையாக ரூ.70 லட்சம் மதிப்பில் கோவை அம்மணி அம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விர்ச்சுவல் ரியாலிட்டி லேப் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி லேப் மூலமாக உடல் உறுப்புகள், தாவரம், விலங்குகள், காலநிலை தட்பவெட்பம் ஆகியவை துல்லியமாக கண்முன் கொண்டு வரப்படுவதால், பாடத்திட்டங்களை மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்வதாக லேப் டெக்னீசியன்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவிகள் கூறுகையில்,“ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்களை விட தற்போது விர்ச்சுவல் ரியாலிட்டி மூலமாக கற்றும் பாடங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. இதனால், மனிதனின் இதயம் எப்படி செயல்படுகிறது என கண்முன்னே கண்டு உடனடியாக புரிந்து கொள்ள முடிகிறது” என்றனர்.
The post தமிழகத்தில் முதன்முறையாக அரசு பள்ளியில் வி.ஆர். பயிற்சி: மாணவிகள் பிரமிப்பு appeared first on Dinakaran.