சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழகப் பாரம்பரிய கிராமியக் கலைகளை வெளி மாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல், தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு அளிக்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த நிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழி வழங்குதல்: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் ஆச்சாள்புரம் சின்னதம்பி, ஆக்காட்டி ஆறுமுகம், நெல்லை சுந்தரராஜன், மதுரை மணி, பாக்கியலட்சுமி, சீதாலட்சுமி (எ) ஜி.எம். சித்திரைசெல்வி, நாகு, சீதாலட்சுமி, ஜெயலதா, ஆண்ட்ரூஸ் ஆகியோருக்கு பொற்கிழித் தொகையாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார். தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்குதல்: தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க முனைவர் சண்முக செல்வகணபதி, ரங்கராஜ், வளப்பக்குடி வீரசங்கர், சீனிவாசன், நடராஜன் ஆகிய 5 நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 நூலாசிரியர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய நிதியுதவி வழங்குதல்: தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்திட 5 நாடகக் கலைஞர்களுக்கும், 5 நாட்டியக் கலைஞர்களுக்கும் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 4 கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். மறைந்த கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பு நிதியுதவி வழங்குதல்:மறைந்த 20 கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 2 மரபுரிமையினருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் மொத்தம் 40 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவி 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு முதல்வரால் வழங்கப்பட்டது.
The post தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு நிதியுதவி: முதல்வர் வழங்கினார் appeared first on Dinakaran.