தமிழ்நாட்டில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் – காரணம் என்ன?

சென்னை கொடுங்கையூரில் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்திருப்பது, மாநிலத்தில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் குறித்த கவலையை அதிகரித்திருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற அப்புவை ஜூன் 11ஆம் தேதி இரவு நகை திருட்டு தொடர்பான ஒரு வழக்கின் விசாரணைக்காக காவல் துறையினர் அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்றனர். அவரை பழைய கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் மயங்கி விழுந்ததாகவும் இதையடுத்து அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் காவல்துறையினர் கூறினர்.

ராஜசேகர் உயிரிழந்த தகவலைக் கேட்டதும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனை முன்பாகத் திரண்டனர். ராஜசேகர் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டினர். ராஜசேகர் நல்ல உடல் நலத்துடன் இருந்ததாகவும் அவருக்கு எந்த உடல்நலக் கோளாறும் இல்லையென்றும் தெரிவித்தனர்.

ராஜசேகர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அவரை கைது செய்த காவல் நிலைய அதிகாரி ஜார்ஜ் மில்லர், துணை ஆயவாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர் ஜாய்சேகர், மணிவண்ணன், காவலர் சத்தியமூர்த்தி ஆகிய ஐந்து பேரையும் இடைநீக்கம் செய்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருக்கிறார். வழக்கு குற்றப் பிரிவு, குற்ற புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த ராஜசேகர் தொடர் குற்றங்களில் ஈடுபடும் ‘பி பிரிவு’ சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியாக சோழவரம் காவல்துறையினரால் வகைப்படுத்தப்பட்டிருந்தார். அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *