
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா (89), கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையை பெற்றவர் இவர். 1973-ம் ஆண்டு 8 ஹிட் படங்களை கொடுத்தார். 1987ம் ஆண்டு அவர் நடித்து 9 படங்கள் வெளியானது. அதில் அடுத்தடுத்து வெளியான 7 படங்கள் ஹிட்டானது.
இந்தி சினிமா வரலாற்றில் இது சாதனையாகும். அமிதாப் பச்சனும், இவரும் சேர்ந்து நடித்த `ஷோலே’ படம் மூலமாக இந்தியா முழுவதும் புகழ் பெற்ற தர்மேந்திரா, சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்டோர் மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்தனர்.

