பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியைக் கலைக்க அமெரிக்கா முயன்றதா? சில அடிப்படைக் கேள்விகளும் பதில்களும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலைவிதியை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அடுத்த ஒரு நாள் நிகழும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அரசியலில், நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில் நேற்று நடந்தது என்ன? பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி நாடாளுமன்றத்தைக் கலைத்தது ஏன்?

இம்ரான் கான், சமீப நாட்களில் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியை எதிர்கொண்டார்.

இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் அதிகாரத்திற்கு வந்ததாக பரவலாகக் கருதப்பட்டது. ஆனால், அரசியல் நோக்கர்களின் கூற்றுப்படி, அந்த ஆதரவு பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளது.

அவருடைய அரசியல் எதிரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைக் கோரினர்.

ஞாயிற்றுக் கிழமை, வாக்கெடுப்பை நடத்துவதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், இம்ரான் கான் தோல்வியடைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிரதமருக்கு மிகவும் நெருக்கமான, நாடாளுமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கும் துணை சபாநாயகர், வாக்கெடுப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவித்தார்.

இம்ரான் கானின் கட்சி உறுப்பினர்கள் ஞாயிற்றுக் கிழமை அன்று, பிரதமர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பைத் தடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்தனர்.

வாக்கெடுப்பு நடக்கவிருந்த சிறிது நேரத்தில், இம்ரான் கானின் ஆளும் பிடிஐ கட்சியைச் சேர்ந்த பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி, தேர்தலை முன்கூட்டியே நடத்தும் முயற்சியாக நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வாக்கெடுப்பு பிரச்னையின் தற்போதைய நிலை என்ன?

வாக்கெடுப்பு தடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், வாக்கெடுப்பைத் தடுக்கும் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா என்பது குறித்து தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து இன்று தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பிரச்னையில் நாளை இறுதிக்குள் நீதிமன்றம் முடிவு செய்வதாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தனது ஆட்சியைக் கலைக்க நினைத்த எதிர்க்கட்சிகள் மீது இம்ரான் கான் முன்வைத்த குற்றச்சாட்டு என்ன?

எதிர்க்கட்சிகள் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அதிலிருந்து தப்பிக்கவே ஆட்சியைக் கலைப்பதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார்.

அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, “90 சதவீதம் ஊழல் வழக்குகள் எதிர்க்கட்சியினரின் ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளன. வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை அனுப்ப முயன்றார்கள். அவர்களுடைய சாம்ராஜ்யங்களை நிறுவ முயன்றார்கள். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் தலையிட விரும்பினார்கள். அதன்மூலம் மட்டுமே வெற்றியடைந்து கொண்டிருந்தார்கள்.

நாங்கள் நாட்டை அழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்கள். கடந்த 3.5 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டுமெனக் கோரி வருகிறார்கள். அதுதான் அவர்களுக்கு வேண்டுமெனில், இப்போது ஏன் இந்த வழியைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆகவே, எது சிறந்தது? மக்களுடைய தேர்வின் வழியே வருவதா அல்லது வெளிநாட்டு சதித் திட்டத்தின் மூலம் வெற்றியடைவதா?” என்று பேசினார்.

இம்ரான் கான் ஆட்சியைக் கலைக்க அமெரிக்கா முயன்றதா?

இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சில அரசியல்வாதிகள், இம்ரான் கான் மீது வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்காததற்காக தேசத் துரோக குற்றம் சாட்டினார்கள்.

ஆனால், ஒரு தொலைக்காட்சி உரையிலும் ட்வீட்களிலும், அமெரிக்க கொள்கை மற்றும் பிற வெளியுறவுக் கொள்கை முடிவுகள் மீதான தனது விமர்சனம், தன்னை அதிகாரத்தில் இருந்து அமெரிக்க நீக்க முயல்வதற்கு வழிவகுத்ததாக அவர் கூறினார்.

தன்னை நீக்குவதற்கான அமெரிக்க தலைமையிலான சதியின் ஒரு பகுதியாக இந்த வாக்கெடுப்பு நடந்ததாக இம்ரான் கான் கூறியிருந்தார். ஆனால், அமெரிக்கா இதை மறுத்துள்ளது.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்தக் குற்றச்சாட்டைக் கேலி செய்தனர். அமெரிக்காவும் அதை மறுத்துள்ளது.

“இந்த குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. பாகிஸ்தானின் அரசியலமைப்பு செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் ஆதரிக்கிறோம்,” என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

பிபிசியின் செகந்தர் கெர்மானி, இம்ரான் கானின் ஆதரவாளர் பலர் அவருடைய கூற்றை இன்னும் நம்புகிறார்கள் எனக் கூறுகிறார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால், இம்ரான் கானின் புகழ் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு இன்னும் கணிசமான ஆதரவாளர்கள் உள்ளதாகவும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அவர் செய்ததைவிடப் புதிய தேர்தல்களில் அவருக்குச் சிறந்த வாய்ப்பு உள்ளதாகவும் பிபிசி செய்தியாளர் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *