நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இன்று மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாலயங்களில் இன்று காலை முதல் பக்தர்கள் குவிந்தனர். சிவாலய ஓட்டத்திலும் இன்றும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மஹா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். குமரி மாவட்டத்திலும் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். மஹா சிவராத்திரி தினத்தில் நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் குமரி மாவட்டத்தில் மட்டுமே நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சிவாலய ஓட்டம், நேற்று காலை புதுக்கடை அருகே முஞ்சிறையில் அமைந்துள்ள முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து தொடங்கியது. காவி வேஷ்டி, காவி துண்டு அணிந்து நெற்றியில் திருநீறு பூசி, கையில் விபூதி பை மற்றும் விசிறியுடன் கோவிந்தா.. கோபாலா.. என்ற கோஷத்துடன் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் தொடங்கினர்.
ஆண்கள் மட்டுமின்றி இந்த முறை பெண்களும் அதிகளவில் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர். ஓட்டமும், நடையுமாக 12 சிவாலயங்களை நோக்கி பயணிக்க தொடங்கினர். முஞ்சிறை மகாதேவர் கோயிலில் தொடங்கிய சிவாலய ஓட்டம் திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றிக்கோடு சிவாலயங்களுக்கு சென்று கடைசியாக இன்று இரவு திருநட்டாலத்தில் நிறைவு பெறும். திருநட்டாலத்தில் சிவ பெருமான் சங்கர நாராயணராக காட்சி தருகிறார். ஹரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில், இந்த சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. நேற்று இரவும் பெரும்பாலான பக்தர்கள் சிவாலய ஓட்டம் ஓடினர். இவர்கள் இன்று அதிகாலையில் திருவிடைக்கோடு கோயிலில் தரிசனம் முடித்து, பின்னர் திருவிதாங்கோடு நோக்கி பயணித்தனர்.
இன்று அதிகாலை முதல் கார், பைக்குகளிலும் சிவாலய பயணத்தை தொடங்கினர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால் 12 சிவாலயங்களிலும் இன்று அதிகாலையிலும் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிவாலய ஓடும் பக்தர்களின் வசதிக்காக அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. நெரிசல் இல்லாமல் பக்தர்கள் செல்லும் வகையில் கியூ செட் அமைக்கப்பட்டு இருந்தது. வழிப்பாதைகளில் மின் விளக்கு வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் ஓடி வரும் சிவாலய பாதைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இரவிலும் பக்தர்கள் பயணித்ததால், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் பக்தர்களின் தோள் பையில் ஒளிரும் ஸ்டிக்கர்களை காவல்துறையினர் ஒட்டினர். சிவாலய பாதைகளில் பைக்குகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கூட்டம், கூட்டமாக பக்தர்கள் வரும் சமயங்களில் போலீசார் ரோட்டோரங்களில் நின்று அவர்கள் கவனமாக கடந்து செல்லும் வகையில் அறிவுரைகள் வழங்கினர்.
மேலும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டும் இருந்தது. மஹா சிவராத்திரியையொட்டி இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அதிகாலையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இன்று இரவு 9 மணிக்கு முதல் கால பூஜைகள் நடக்கின்றன. 12 மணிக்கு 2ம் கால பூஜை, அதிகாலை 2 மணிக்கு 3ம் கால பூஜை, அதிகாலை 4 மணிக்கு 4ம் கால பூஜைகள் நடக்கின்றன. கோயில்களில் அன்னதானமும் வழங்கப்படுகிறது. மஹா சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை ஆகும். சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், வடசேரி சோழராஜா கோயில், வடசேரி தழுவிய மகாதேவர் கோயில், ஒழுகினசேரி கோதை கிராமம் சிவன் கோயில், கருப்புக்கோட்ைட சிவன் கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பழமையான சிவாலயங்களில் இன்று சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை பூஜைகள் நடக்கும் என்பதால், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர்.
The post பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்தில் இன்றும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: குமரியில் மஹா சிவராத்திரி விழா கோலாகலம் appeared first on Dinakaran.