பொதுக்குழுவை புறக்கணித்து வெளிநடப்பு செய்த ஓபிஎஸ்

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார்.

இன்று (ஜூன் 23) நடந்த அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதாகவும், ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2190 பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும், அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை இன்றே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் கோரிக்கை கடிதத்தை முன்வைத்தனர். இதனையடுத்து வரும் ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.

இக்கூட்டத்தில் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், வேலுமணி, தமிழ்மகன் உசேன் போன்றோர் பேசுகையில் பன்னீர்செல்வத்தின் பெயர்களை குறிப்பிடுவதை தவிர்த்து வந்தனர். இந்த நிகழ்வுகளை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் ஆகியோர் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது அவரை சூழ்ந்த தொண்டர்கள் சிலர் ஓபிஎஸ் மீது தீர்மான நகல்களை வீசி எறிந்ததாகவும், தண்ணீர் பாட்டில்களை வீசியதாகவும், முதுகில் குத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் வருகை தந்த வாகனத்தை சிலர் பஞ்சர் ஆக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

செல்லாது

திருமண மண்டபத்தில் இருந்து கிளம்பும் முன்னர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டால் தான் அறிவிப்பு செல்லும். இது சட்டத்திற்கு புறம்பாக நடந்த பொதுக்குழு கூட்டம். புதிய பொதுக்குழு கூட்ட தேதி செல்லாது என்றார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published.