பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோங்கல்மேடு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 46 மலைக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்கள், மூங்கில் கூடைகளை முடைந்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் பழங்குடி இன சான்றிதழ் இல்லாததால் அரசின் சலுகைகளை பெற முடியாத நிலை உள்ளது.
கோங்கல்மேடு பகுதி மலைக்குறவர் இன மக்கள், பழங்குடி இனச் சான்றிதழ் வழங்கக் கோரி வருவாய்த் துறையிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் நேற்று பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மூங்கில் கூடைகளை முடைந்து, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.