in , ,

மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

canvas7

மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் முதல்வர் ஜெயலலிதா என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

தென்சென்னை திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து எம்.ஜி.ஆர். நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியது:-

பாபர் மசூதி இடிப்புக்காக கரசேவைக்கு ஆள்களை அனுப்பியவர் ஜெயலலிதா. இப்போது அதை மறுக்கிறார். அதிமுகவின் நெருங்கிய கட்சிகளான கம்யூனிஸ்ட்டுகள்கூட, “கரசேவைக்கு ஆள்களை ஜெயலலிதா அனுப்பினார்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர்.

மதச்சார்பற்ற கொள்கையில் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை.

சேது சமுத்திரத் திட்டம் அண்ணா கனவு கண்ட திட்டம். அதிமுகவின் முதல் தேர்தல் அறிக்கையில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டிருந்தது. பிறகு அது கைவிடப்பட்டுவிட்டது. இப்போது சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், அந்த திட்டமே வேண்டாம் என்று தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தின் வளம் பெருகும். இந்தத் திட்டத்தைத்தான் ஜெயலலிதா வேண்டாம் என்று கூறுகிறார். சேது திட்டத்தை நிறைவேற்றக்கோரி விரைவில் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும். அதிமுக ஆட்சியில் விலைவாசி அதிகமாக உயர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது.

தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தந்த புள்ளிவிவரத்தின்படி 2012-ல் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தற்கொலைகள் அதிக அளவில் நடந்துள்ளன. 1.95 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

இது போன்ற தற்கொலைகளுக்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்பு இன்மையும் ஏழ்மையும்தான் காரணம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுக ஆட்சியில் புதிய திட்டம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. தொழில் வளர்ச்சியில் தமிழகம் மிகவும் நலிவடைந்துள்ளது என்றார் கருணாநிதி.

தினமணி

தமிழகத்தின் மொத்த வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்: தன்னார்வக் குழு தகவல்

ரஷ்ய மொழி பேசுவோர்க்கு குடியுரிமை: புதிய சட்டத்துக்கு புடின் ஒப்புதல்